இந்தியாவின் வெற்றி ஆணவத்தை சிதறடித்தார் முன்றோ........
இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டி -20 போட்டியில், நியூசிலாந்து அணி, 40 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.
இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதிய இரண்டாவது டி20 போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று தொடங்கியது.
இதில் நாணயசுழற்சியில் வென்ற நியூசிலாந்து அணி துடுப்பெடுத்தாட முடிவு செய்தது. இந்திய அணியில் முகம்மது சிராஜ் புதுமுகமாக களமிறங்கினார். கப்தில் மற்றும் முன்ரோ தொடக்க ஆட்டக்காரர்களாக துடுப்பெடுத்தாடினர்.
தொடக்கம் முதலே இந்திய அணியில் பந்துவீச்சை சிதறடித்து அதிரடியான ஆட்டத்தை இருவரும் வெளிப்படுத்தினர்.
இருவரின் அதிரடியை கட்டுபடுத்த முடியாமல் இந்திய பவுலர்கள் திணறினர். 11 ஓவர்களில் அந்த அணி 100 ஓட்டங்களை கடந்தது. 12வது ஓவரை வீசிய சாகல் கப்திலை வெளியேற்றினார்.
இதனையடுத்து களமிறங்கிய வில்லியம்சன் 12 ஓட்டங்களில் புதுமுக பவுலர் சிராஜ் பந்தில் ரோகித் வசம் கேட்ச் கொடுத்தார்.
ஒரு புறம் விக்கெட்டுகள் விழுந்தாலும் முன்ரோ தனது அதிரடியை நிறுத்தவில்லை. சிக்சர்களும், பவுண்டரிகளும் அவர் அடிக்க இந்திய பவுலர்கள் செய்வதறியாது திணறினர்.
19-வது ஓவரில் முன்ரோ 54 பந்துகளில் தனது இரண்டாவது சதத்தை பதிவு செய்தார். 20 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 196 ஓட்டங்கள் குவித்தது.
முன்ரோ 109 ஓட்டங்களுடனும் ப்ரூஸ் 18 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர். இந்திய தரப்பில் சாகல் மற்றும் சிராஜ் தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
அறிமுக பந்துவீச்சாளராக களமிறங்கிய சிராஜ் 4 ஓவர்கள் விசி 53 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்துள்ளார். 197 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்க உள்ளது.
கடின இலக்கை துரத்திய இந்திய அணிக்கு துவக்க வீரர்களான ரோகித் சர்மா (5), தவான் (1) சொதப்பலான துவக்கம் அளித்தனர்.
பின்ன்னர் களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் (23) நீண்ட நேரம் தாக்குபிடிக்கவில்லை. தொடர்ந்து பாண்டியா (1) சோதி சுழலில் திக்கு முக்கு தெரியாமல் சொதப்பலாக போல்டானார்.
இதையடுத்து இந்திய அணித்தலைவர் கோஹ்லி, தனி ஒருவனாக வெற்றிக்கு போராடினார். ஆனால் எதிர்முனையில் டோனியும் போராடினார், இந்திய அணிக்கு நெருக்கடி அதிகமானது.
இந்நிலையில் கோஹ்லியும் (65) வெளியேற இந்திய அணி தோல்வியை நோக்கி சென்றது. 20 ஓவர் முடிவில் இந்திய அணி 7 விக்கெட்டுக்கு 156 ஓட்டங்கள் மட்டுமே எடுக்க நியூசிலாந்து அணி 40 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரை நியூசிலாந்து அணி, 1-1 என சமன் செய்தது. இரு அணிகள் மோதும் 3வது டி-20 போட்டி திருவனந்தபுரத்தில் நடக்கிறது.