Wednesday, November 15, 2017

How Lanka

இயற்கை அனர்த்தம் தொடர்பில் நாட்டு மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லையாம்

கிழக்கு மாகாணத்திலோ அல்லது நாட்டின் வேறு எந்தவொரு இடத்திலோ இயற்கை அனர்த்தம் தொடர்பில் அச்சத்தை ஏற்படுத்திக்கொள்ள அவசியம்  இல்லை என இடர் முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

கடல் மற்றும் கிணறுகளில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக அம்பாறை மற்றும் மட்டக்களப்பு உள்ளிட்ட சில பகுதிகளைச் சேர்ந்த மக்கள் குழப்பமடைந்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் இடர் முகாமைத்துவ நிலையம் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் அறிவித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கைக்கு தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய எவ்வித நில நடுக்கமும் பதிவாகவில்லை என வளிமண்டலவியல் திணைக்களம் உறுதி செய்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் கூறினார்.

அத்தோடு நாட்டிற்கு உள்ளேயும் எவ்வித நில நடுக்கமும் பதிவாகவில்லை என புவி சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் அறிவித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

ஆகவே மக்கள் அநாவசிய அச்சத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டியதில்லை என இடர் முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் வலியுறுத்தியுள்ளார்.

ஏற்கனவே தமது இருப்பிடங்களிலிருந்து வௌியேறிய மக்கள் சொந்த இடங்களுக்கு திரும்புமாறும் இடர் முகாமைத்துவ நிலையம் மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

இந்த நடவடிக்கையினை சீராக முன்னெடுப்பதற்காக பொலிஸாரின் ஒத்துழைப்பும் பெறப்பட்டுள்ளதாக பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் திடீரென வற்றிப் போன கிணறுகள் 


கிழக்கு மாகாணத்திலுள்ள பல கிணறுகள் திடீரென வற்றிப் போனமையினால் மக்கள் பெரும் பீதியடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

சுனாமி அனர்த்தம் ஏற்படவுள்ளதாக அஞ்சிய மக்கள் அங்கிருந்து வெளியேறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.


மட்டக்களப்பு ஒந்தாச்சிமடம் பகுதியிலும், அம்பாறை மாவட்டம் கல்முனை, பாண்டிருப்பு பகுதியிலும் கிணறுகள் திடீரென வற்றுத் தொடங்கியுள்ளன.

இந்தத் தகவல் பரவத் தொடங்கியதும் பல இடங்களில் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.


எனினும் கிழக்கு மாகாணத்தில் சுனாமி ஆபத்து இல்லை என அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.


இது குறித்து மக்கள் அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை என நிலையத்தின் மாவட்ட பணிப்பாளர் எம்.றியாஸ் தெரிவித்துள்ளார்.

கடந்த 2004ஆம் ஆண்டு சுனாமி பேரழிவு ஏற்படுவதற்கு முன்னரும் திடீரென கிணறுகள் வற்றியுள்ளன. இதன்பின்னர் பாரிய சுனாமி பேரனர்த்தம் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.