2017ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. இலங்கை பரீட்சைகள் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், www.doenets.lk என்ற இணையத்தளம் ஊடாக பெறுபேறுகளை பார்வையிட முடியும் என பரீட்சைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
2017ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில், பௌதீக விஞ்ஞான பிரிவில் அகில இலங்கை ரீதியில் யாழ். மாணவர் முதலிடம் பெற்றுள்ளார்.
யாழ். ஹாட்லி கல்லூரி மாணவரான ஸ்ரீதரன் துவாரகன் பௌதீக விஞ்ஞான பிரிவில் முதலிடம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த மாணவன் யாழ். வடமராட்சி வலய கணணி வள முகாமையாளர் சிறிதரனின் மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மாணவன் துவாரகனுக்கு பாராட்டுக்களைத் தெரிவிப்பதோடு தமிழ்வின் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றது.
2017ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2ஆம் திகதி ஆரம்பமாகி செப்டம்பர் மாதம் 2ஆம் திகதி வரை இடம்பெற்றது. இம்முறை பரீட்சையில் மூன்று இலட்சத்து 15 ஆயிரத்து 227 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர்.
இதேவேளை, கொழும்பில் உள்ள பாடசாலைகளுக்கு நாளை முற்பகல் 10.00 மணிமுதல் பெறுபேறுகள் வழங்கப்படவுள்ளன.
கொழும்புக்கு வெளியே உள்ள பாடசாலைகளுக்கு நாளை மறுதினம் பெறுபேறுகளை பெற்றுக் கொள்ள முடியும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வர்த்தகப் பிரிவில் மாத்தறை மாவட்ட மாணவி முதலிடம்
2017ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் வர்த்தக பிரிவில் அகில இலங்கை ரீதியில் மாத்தறை மாவட்டத்தை சேர்ந்த மாணவி முதலிடம் பெற்றுள்ளார்.
மாத்தறை - சுஜாதா கல்லூரியை சேர்ந்த டிலானி ரசந்திகா என்ற மாணவியே முதலிடம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை, 2017ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்று இரவு வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.