Tuesday, December 12, 2017

How Lanka

டில்லு குழுவைச் சேர்ந்த 8 பேருக்கான சிறைத்தண்டனையை யாழ். மேல் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.


யாழ்ப்பாணத்தில் செயற்படும் பிரபல வாள்வெட்டுக் குழுக்களில் ஒன்றான, டில்லு என்பவர் தலைமையிலான வாள்வெட்டுக் குழுவைச் சேர்ந்த 8 பேருக்கான சிறைத்தண்டனையை யாழ். மேல் நீதிமன்றம் இன்று உறுதி செய்துள்ளது.

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் அவர்களின் சிறைத்தண்டனையை உறுதிப்படுத்தி தீர்ப்பளித்துள்ளார்.

வாள்வெட்டுக் குழுவின் தலைவரான டில்லு உள்ளிட்ட மூவருக்கு மூன்று ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனையும் ஏனைய ஐந்து பேருக்கு ஓராண்டு கடூழிய சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் நீதவான் எஸ்.சதீஸ்கரன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த வழக்கின் 8 சந்தேகநபர்களும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்து, அவர்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

எனினும், அந்த தீர்ப்பிற்கு எதிராக டில்லு தலைமையிலான வாள்வெட்டுக் குழுவினர் யாழ். மேல் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்தனர்.

நீதவானின் தீர்ப்பு சரியானது எனவும் மேன்முறையீடு செய்யும் அளவிற்கு தீர்பில் பிழை இல்லை எனவும் நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் அறிவித்துள்ளார்.

இதேவேளை, குற்றவாளிகள் 8 பேரும் பாதிக்கப்பட்ட நபருக்கு தலா 50 ஆயிரம் ரூபா நட்டஈடு செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

நட்ட ஈட்டை செலுத்தத் தவறும் பட்சத்தில் ஓராண்டு சாதாரண சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அத்துடன், அனைத்து குற்றவாளிகளும் தலா 1500 ரூபா தண்டம் செலுத்த வேண்டும் எனவும், இதனை செலுத்த தவறும் பட்சத்தில் மேலும் ஒரு மாத கடூழிய சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

யாழ். மடத்தடி பகுதியில் 2012 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 05 ஆம் திகதி இந்த வாள்வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக இடம்பெற்று வரும் வாள்வெட்டு தாக்குதல்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள போதிலும், கடந்த இரண்டு கிழமைகளில் யாழ்ப்பாணத்தை அச்சுறுத்தும் வகையிலான வாள்வெட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில், யாழ்ப்பாணத்தில் செயற்படும் பிரபல குழுவான டில்லு தலைமையிலான குழுவிற்கு கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.