ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் அபார வெற்றி பெற்றுள்ளார்.
தமிழகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் காலியாக இருந்த ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் கடந்த 21ம் திகதி நடந்தது.
இத்தேர்தல் ஆரம்பித்ததில் இருந்து ஏகப்பட்ட சர்ச்சைகள், புகார்கள், கொந்தளிப்புகள் நிலவின, அதுமட்டுமின்றி முதலில் தேர்தல் திட்டமிடப்பட்டு பின்னர் தள்ளிவைக்கப்பட்டது, பணம் வரலாறு காணாத அளவுக்கு விளையாடியது.
முதல் தேர்தல் ரத்தான நிலையில் ஓபிஎஸ்- ஈபிஎஸ் இணைந்து கொண்டு டிடிவி தினகரனை ஓரங்கட்டினர், அடுத்ததாக இரட்டை இலை சின்னத்தை பெற முயன்ற வழக்கில் சிறைக்கும் சென்றார்.
தொடர்ச்சியாக வருமானவரித்துறை சோதனை என சசிகலா குடும்பத்தையே ஆட்டம் காணவைக்க முயன்றனர், ஆனால் எதற்கும் அசராத சசிகலா தரப்பு, ஆர்.கே.நகர் தேர்தலில் சுயேட்சையாக களம்கண்டது.
டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டதுடன், வாக்குபதிவு எந்திரத்திலும் ஒழுங்கான வரிசைப்படி இல்லாமல் இருந்ததாக தினகரன் புகார் தெரிவித்தார்.
இதையெல்லாம் தவிடுபொடியாக்கும் வண்ணம் இன்றைய தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன, 40707 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
ஜெயலலிதாவுக்கு அடுத்தபடியாக யார் வருவார்கள் என அரசியல் களமே பரபரப்பான நிலையில் டிடிவி தினகரன் வெற்றி பெற்றுள்ளார்.
இதனால் ஆளும் கட்சியான அதிமுக-வும், எதிர்க்கட்சியான திமுக-வும் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.
தினகரன் ஆதரவாளர்கள் மீது செருப்புவீச்சு
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் 40,707 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
டிடிவி தினகரன், சென்னை மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆர் சமாதிக்கும், பெரியார் சிலைக்கும் மரியாதை செலுத்தினார்.
அப்போது அங்கு சென்னை மெரினா அருகே தினகரன் தொண்டர்கள் பாட்டு, நடனம் என கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்பகுதியில் இருந்த அதிமுக ஆதரவாளர்கள் தினகரன் ஆதரவாளர்களை அடித்து விரட்டியதுடன் செருப்புகளை தூக்கி வீசியெறிந்தனர்.