தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளிடையே ஏற்பட்டுள்ள முறுகல் நீடிக்கின்றது.
இந்த நிலையில், தமிழரசுக் கட்சியுடன் மீண்டும் இணைந்து போட்டியிடுவது தொடர்பில் எவ்வித தீர்மானமும் இல்லை என தமிழீழ விடுதலை இயக்கம் இன்று தெரிவித்துள்ளது.
தமிழரசுக் கட்சியின் மேலாதிக்க முயற்சி மற்றும் தொகுதிப்பங்கீடு தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினை காரணமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் இரண்டு பங்காளிக் கட்சிகள் தமிழரசுக் கட்சியுடன் இணைந்து எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்துள்ளன.
மக்களின் ஆணைக்கு புறம்பாக தமிழரசுக் கட்சி செயற்படுவதாகத் தெரிவித்து வௌியேறிய ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழர் விடுதலைக் கூட்டணி உள்ளிட்ட சில தரப்பினருடன் சேர்ந்து உதய சூரியன் சின்னத்தில் புதிய கூட்டமைப்பை உருவாக்கியுள்ளது.
இந்த நிலையில், தமிழரசுக் கட்சியுடன் சேர்ந்து தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என தமது கட்சியின் நிலைப்பாட்டில் இதுவரை எவ்வித மாற்றமும் இல்லை என ரெலோ எனப்படும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் சட்டத்தணி ஶ்ரீ காந்தா தெரிவித்தார்.
இதேவேளை, இன்று மாலை கிளிநொச்சியிலுள்ள தமிழர் விடுதலைக் கூட்டணி அலுவலகத்திற்குச் சென்ற தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர், சட்டத்தரணி ஶ்ரீ காந்தா, வீ. ஆனந்த சங்கரியை சந்தித்துக் கலந்துரையாடினார்.
இலங்கை தமிழரசுக் கட்சி விட்டுக்கொடுப்புடன் செயற்பட வேண்டியதன் அவசியத்தை மற்றுமொரு பங்காளிக் கட்சியான புளொட் எனப்படும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகமும் வலியுறுத்தியுள்ளது.
இந்நிலையில், திருகோணமலை உதவி தேர்தல்கள் ஆணையாளர் அலுவலகத்தில் இன்று கட்டுப்பணம் செலுத்திய தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனிடம் கூட்டமைப்பில் எழுந்துள்ள பிரச்சினை தொடர்பில் ஊடகவியலாளர்கள் வினவினர்.
இதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் வேறுபட்ட கருத்துக்கள் இருப்பதாக அவர் பதிலளித்தார்.
ஒற்றுமையாக வேட்பு மனு தாக்கல் செய்யப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் துவிச்சக்கரவண்டி சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி இன்று அறிவித்தது.
யாழ்ப்பாணத்திலுள்ள கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இதனைத் தெரிவித்தார்.
இதேவேளை, தமிழரசுக் கட்சியின் யாழ். அலுவலகத்திலும் இன்று விசேட கலந்துரையாடலொன்று நடைபெற்றது.
மொத்தமாக கொட்டித் தீர்த்தார் சுமந்திரன்
உதயசூரியன் வரலாற்று பிரச்சித்தி பெற்ற சின்னம். பிரபல்யமான சின்னத்தை பெற்றுவிட்டோம் என்னும் நினைப்பில் மக்கள் வாக்களிப்பார்கள் என நம்பி சுரேஸ் மற்றும் ஆனந்தசங்கரி மக்களிடம் சென்றால் அது உதயசூரியன் சின்னத்திற்கு இழிவையே உண்டாக்கும் என கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினரின் இல்லத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில்,
தமிழ் மக்கள் சின்னத்திற்கு வாக்களிப்பதில்லை. கொள்கைக்காகவும், அந்த கொள்கையை வைத்திருப்பவர் மீது கொள்ளும் நம்பிக்கைக்காகவும் பகுத்தறிந்து வாக்களிப்பவர்கள்.
மேலும், தமிழ் மக்கள் வழங்கிய ஆணையை மீறி தமிழரசு கட்சி செயற்படுவதாகவும், அரசாங்கத்தை பாதுகாப்பதாகவும் தமிழர் விடுதலை கூட்டணி தலைமையிலான புதிய கூட்டணியினர் கூறுவது தேர்தல்கால பேச்சுக்கள். அந்த பேச்சுக்களை கேட்டு மக்கள் பிரமிக்க வேண்டிய அவசியமே இல்லை.
சுரேஷ் பிறேமச்சந்திரன் சில நாட்களுக்கு முன்னர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துடன் இணைந்து தேர்தலை எதிர்கொள்ளப்போவதாக கூறியிருந்தார். பின்னர் கஜேந்திரகுமாருடன் சேராமல் தமிழர் விடுதலை கூட்டணியுடன் இணைந்துள்ளார் என சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, நாங்கள் அரசாங்கத்தை பாதுகாக்கின்றோம் என எவராலும் கூற இயலாது. இந்த அரசாங்கத்திற்கும், முன்னைய அரசாங்கத்திற்கும் அழுத்தங்களை கொடுக்க நாங்களே காரணம்.
சர்வதேச அழுத்தம் செயற்பட ஆரம்பிக்கும் போது அவர்கள் அழுத்தங்களை குறைத்து உற்சாகப்படுத்துவார்கள். அதன் அடிப்படையிலேயே இந்த அரசாங்கம் 2 தடவைகள் ஐ.நா தீர்மானத்தை ஆதரித்து நிறைவேற்றியது என தெரிவித்தார்
மேலும், தற்போது அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காண புதிய அரசியலமைப்பு உருவாக்க பணிகள் நடக்கின்றன. அதில் பங்கெடுக்ககூடாது என கூறுவது மடமைத்தனம்.
இதை செய்யுங்கள் என நாம் கேட்ட விடயத்தை அரசாங்கம் செய்யும் போது அதனை எதிர்த்து கொண்டிருக்க முடியாது. மேலும் அரசாங்கம் செய்யாமல் விட்டுவிடும் என மக்களிடம் இருக்கும் சந்தேகம் நியாயமானது.
அதற்காக எல்லாவற்றையும் எதிர்க்க வேண்டும் என கூறப்படும் கருத்து ஏற்க முடியாதது. நாங்கள் கேட்டதை செய்யும் போது ஆதரவு கொடுக்க வேண்டிய அவசியமும், செய்யாமல் காலத்தை இழுத்தடித்தால் எதிர்க்க வேண்டிய கடமையும் எங்களுக்கு உள்ளது என தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் தற்போது உருவாகியிருக்கும் நிலைமைக்காக தமிழ் மக்களிடம் மன்னிப்பு கோருகின்றேன். கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கிடையில் உருவாகியிருக்கும் பிணக்குகள் சுமூகமாக தீர்க்கப்படும்.
ஒரு கொள்கையில் பயணிக்கும் கட்சிகளுக்கிடையில் பிணக்குகள் உருவாகக்கூடாது. அதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் கூட்டமைப்பின் சகல பங்காளி கட்சிகளும் விட்டுக்கொடுப்புடன் செயற்படவேண்டும் என கூறியுள்ளார்.
நேற்று ரெலோ அமைப்பின் தலைவர் என்னுடன் பேசியிருக்கின்றார். இதன்போது பிணக்குகளை தீர்ப்பதற்கான வழிகள் அல்லது மாற்று திட்டங்கள் தொடர்பாக பேசியிருக்கின்றோம்.
இது தொடர்பாக தமிழரசு கட்சியின் தலைவரை சந்தித்து கூறுவேன். அதேபோல் ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதனும் தன்னுடைய கட்சி உறுப்பினர்களுடன் பேசுவார்.
இதனடிப்படையில் நாளை அல்லது நாளை மறுதினம் இணக்கப்பாடு வரும் என நம்புகிறேன். அதற்கு பின்னர் புளொட் அமைப்புடனும் பேச்சுவார்த்தைகளை நடத்தி இணக்கப்பாடு எட்டப்படும்.
சமரசமாகவே இந்த பிரச்சினை தீர்க்கப்படவேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
அரசியலில் இதெல்லாம் சகஜம் என சிலர் கூறுகிறார்கள். ஆனால் நாங்கள் ஒரு அரசியல் கட்சி அல்ல. தமிழ் மக்களுடைய உரிமைகளுக்காக உழைக்கும் கூட்டமைப்பு.
தமிழரசு கட்சி ஒரு கட்சிக்கான கட்டமைப்புக்களை கொண்டிருக்கலாம். ஆனால் மற்றவர்கள் ஆயுத போராளிகளாக இருந்து பின்னர் அரசியலுக்குள் வந்தவர்கள். அவர்களிடம் அவ்வாறான கட்சி கட்டமைப்புக்கள் இல்லாமல் இருக்கலாம். அதற்காக அவர்களை ஒதுக்குவது நியாயமற்ற ஒரு செயல்.
பங்காளி கட்சிகளுடன் தொடர்ந்தும் இணக்கப்பாட்டை உண்டாக்குவதற்கான பேச்சுக்களை நிச்சயமாக தொடர்வோம். ஆனால் நாங்கள் பிரிந்து செல்ல போகிறோம் என விடாப்பிடியாக இருந்தால் தமிழரசு கட்சி தனித்தே தேர்தலை சந்திக்கும் நிலைவரும்.
மேலும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சிகள் தனித்தனியாக தேர்தலை சந்திப்பது தற்போதுள்ள தேர்தல் முறையில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு சாதகமானது.
ஆனால் அது வேட்பாளர்களுக்கிடையில் தேவையற்ற போட்டியையும், மக்கள் மத்தியில் குழப்பத்தையும் உண்டாக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.