Thursday, December 7, 2017

How Lanka

உரத் தட்டுப்பாடு - விவசாயிகள் பாதிப்பு


அம்பாறை மாவட்டத்தில் 4000 ஏக்கர் வயல் நிலத்திற்குத் தேவையான யூரியா உள்ளிட்ட உரம் கிடைக்காமையினால் சுமார் 3,000 விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உர மூடையில் இருந்து பகுதி பகுதியாக உரத்தினை விற்பனை செய்வதற்கு முயற்சித்த போது, அது நுகர்வோர் சட்டத்திற்கு முரணானது என்பதனால் அதற்கு அதிகாரிகள் இடமளிக்கவில்லை என வியாபாரிகள் தெரிவித்தனர்.

நாட்டின் பல பகுதிகளிலும் விளைச்சலுக்குத் தேவையான உரம் கிடைக்காமையினால் விவசாயிகள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குருநாகல் மாவட்டத்தில் 7,000 ஏக்கருக்கு பயிர்செய்கை மேற்கொண்ட விவசாயிகள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அனுராதபுரம் மாவட்டத்திலும் விவசாயிகள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாக நியூஸ்பெஸ்ட் செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் 17, 385 ஏக்கர் பெரும்போக நெற்செய்கை பண்ணப்படுகின்றது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் 10 கமலநல சேவை நிலையங்கள் காணப்படுகின்ற போதிலும் பெரும்பாலானவற்றில் உரம் இல்லை என விவசாயிகள் தெரிவித்தனர்.

கமநல சேவைகள் நிலையங்களில் உரம் இன்மைால் அதிகளவு விலை கொடுத்து தனியார் வர்த்தக நிலையங்களில் கொள்வனவு செய்ய வேண்டியுள்ளதாகவும், இதனால் மேலதிக செலவீனம் ஏற்படுவதாகவும் விவசாயிகள் குறிப்பிட்டனர்.

கமலநல சேவைகள் திணைக்களத்தினால் ஒரு அந்தர் உரம் 2500 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.

இந்நிலையில், உரப்பற்றாக்குறை தொடர்பில் தேசிய செயலாளர் அலுவலகத்திடம் நியூஸ்பெஸ்ட் வினவியது.

வறட்சியினால் இன்னும் செய்கையை மேற்கொள்ளாத பல பிரதேசங்களில் உரம் அதிகளவில் காணப்படுவதாக அலுவலகத்தின் பணிப்பாளர் அஜித் புஷ்பகுமார தெரிவித்தார்.

அதனால், தற்போது பயிர்செய்கை மேற்கொள்ளப்படும் பகுதிகளுக்கு அதனை விநியோகிக்க நடவடிக்கை எடுத்துள்ளதான அவர் குறிப்பிட்டார்.

உலக சந்தையில் உரத்திற்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு இதில் தாக்கம் செலுத்துவதாகவும் தற்போதைய பிரச்சினைக்கு தீர்வு வழங்கும் வகையில் சீனாவைக் கைவிட்டு பாகிஸ்தானில் இருந்து உரம் கொள்வனவு செய்யவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பாகிஸ்தானில் இருந்து 38,000 மெட்ரிக் தொன் உரம் இன்னும் 4 நாட்களில் நாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளதாக அஜித் புஷ்பகுமார மேலும் தெரிவித்தார்.