கடந்த ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில், பயணிகள் மற்றும் பொருட்களை ஏற்றிச்செல்லும் முச்சக்கரவண்டிகளுக்கு மீட்டர் பொருத்தப்படுவதைக் கட்டாயமாக்கும் வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டது.
எனினும், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் முச்சக்கரவண்டிகள் மீட்டர் பொருத்தப்படாமலே சேவையில் ஈடுபடுகின்றன.
செப்டம்பர் மாதம் 9 ஆம் திகதி வௌியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில், பயண நிறைவின் போது பயணிகள் கட்டணம் செலுத்திய பின்னர், பயணிகளின் விருப்பத்திற்கு அமைய பற்றுச்சீட்டு வழங்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
பயணித்த தூரம், வாகனப் பதிவு இலக்கம், அறவிடப்பட்ட தொகை மற்றும் பயணத் திகதி என்பன பற்றுச்சீட்டில் குறிப்பிடப்பட்டிருத்தல் அவசியமாகும்.
மேலும், முச்சக்கரவண்டி சாரதியின் இருக்கைக்கு பின்புறத்தில் பயணிகளுக்கு தௌிவாகத் தெரியக்கூடிய வகையில், வாகனப் பதிவு இலக்கம், சாரதியின் பெயர், நிழற்படம் என்பன காட்சிப்படுத்தப்படல் வேண்டும்.
முச்சக்கரவண்டி சாரதியாக சேவையாற்றும் அனைத்து சந்தர்ப்பங்களிலும், குறுகிய காலத்திற்குள் விரைவாக சென்றடையக் கூடிய வீதியூடாக பயணிகள் செல்லக்கூடிய இடங்களுக்கு அவர்களை அழைத்துச்செல்ல வேண்டும் எனவும் வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது.
எந்தவொரு முச்சக்கரவண்டியிலும் அதன் வலது பக்கத்தினூடாக பயணிகள் வண்டியில் ஏறுவதற்கோ, இறங்குவதற்கோ இடமளிக்கக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வர்த்தமானி அமுல்படுத்தப்பட்டு இரண்டு மாதங்கள் கடந்துள்ள நிலையில், வர்த்தமானியில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றனவா என்பது கேள்விக்குறியே?
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பயணிகள் மற்றும் பொருட்களை ஏற்றிச்செல்லும் முச்சக்கரவண்டிகளுக்கு இதுவரையில் மீட்டர் பொருத்தப்படாதுள்ளது.