Monday, January 8, 2018

How Lanka

ஆஷஸில் அவுஸ்திரேலியா அபாரம்

அவுஸ்திரேலிய அணி கடைசி ஆஷஸ் டெஸ்டில் இங்கிலாந்தை, இன்னிங்ஸ் மற்றும் 123 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றுள்ளது.

சிட்னியில் நடைபெற்ற கடைசி ஆஷஸ் டெஸ்டில், முதலில் துடுப்பாட்டத்தை துவங்கிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 346 ஓட்டங்கள் எடுத்தது.

அந்த அணியின் ஜோ ரூட் 83 ஓட்டங்கள் குவித்தார், அவுஸ்திரேலிய அணி தரப்பில் கம்மின்ஸ் 4 விக்கெட்டும், ஸ்டார்க் மற்றும் ஹேசல்வுட் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர், தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய அவுஸ்திரேலிய அணி, அபாரமாக விளையாடி 7 இழப்புக்கு 649 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

அந்த அணி தரப்பில் கவாஜா 171 ஓட்டங்களும், ஷான் மார்ஷ் 156 ஓட்டங்களும், மிட்செல் மார்ஷ் 101 ஓட்டங்களும் குவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, 303 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி, நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் 46 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 93 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

இந்நிலையில் இன்று கடைசி நாள் ஆட்டத்தை தொடர்ந்த இங்கிலாந்து, அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது, இறுதியில் வெறும் 180 ஓட்டங்களில் இங்கிலாந்து அணி சுருண்டது.


அந்த அணியில் அதிகபட்சமாக 58 ஓட்டங்கள் குவித்த ஜோ ரூட், 'Retire hurt' முறையில் வெளியேறினார். அவுஸ்திரேலிய அணி தரப்பில் கம்மின்ஸ் 4 விக்கெட்டும், நாதன் லயன் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதனால், அவுஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் மற்றும் 123 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும், தொடரையும் 4-0 என்ற கணக்கில் வென்றுள்ளது.

இப்போட்டியில் கம்மின்ஸ் ஆட்டநாயகனாகவும், ஸ்டீவன் ஸ்மித் தொடர் நாயகனாகவும் தெரிவு செய்யப்பட்டனர்