Saturday, January 27, 2018

How Lanka

இறுதிப் போட்டியில் இலங்கை வெற்றி பெற்று கிண்ணத்தை கைப்பற்றியது


வங்கதேச அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் இலங்கை அணி 79 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது.

வங்கதேசம், ஜிம்பாப்வே, இலங்கை அணிகள் விளையாடும் முத்தரப்பு தொடர் வங்கதேசத்தில் நடைபெற்றது. இதில் இறுதிப் போட்டியில் இன்றைய ஆட்டத்தில் இலங்கை-வங்கதேசம் அணிகள் மோதின.


ஆரம்பத்தில் சொதப்பினாலும், அதன் பின் விளையாடிய ஆட்டங்களில் இலங்கை அணி சிறப்பாக செயல்பட்டதால், இறுதிப் போட்டியிலும் இலங்கை அணி வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

டாக்காவில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. அதன் படி இலங்கை அணிக்கு துவக்க வீரர்களாக குணதிலகா, உபுல்தரங்கா களமிறங்கினர்.

குணதிலகா 6 ஓட்டங்களில் வெளியேற, அடுத்து வந்த குசால் மெண்டிஸ் மற்றொரு துவக்க வீரர் உபுல் தரங்காவுடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.


இந்த ஜோடியை வேகப்பந்து வீச்சாளர் மோர்தசா பிரித்தார். குசால் மெண்டிஸ் 28 ஓட்டங்களில் பெளலியன் திரும்பினார். அடுத்து வந்த நிரோசன் டிக்வெல்லா 42, தினேஷ் சண்டிமால் 45 என சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், இலங்கை அணியின் ஓட்டம் விகிதமும் எகிறியது.

ஒரு பக்கம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த உபுல் தரங்கா அரைசதம் கடந்த 56 ஓட்டங்கள் எடுத்த நிலையில் பெளலியம் திரும்ப, இலங்கை அணி இறுதியாக 50 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 221 ஓட்டங்கள் எடுத்தது.

வங்கதேச அணி சார்பில் அதிகபட்சமாக ரூபுல் ஹோசன் 4 விக்கெட்டுகளும், முஸ்தபிகுர் ரஹ்மான் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.


இதையடுத்து 222 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணிக்கு தமிம் இக்பால் 3 ஓட்டங்கள், மொகமத் மிதுன் 10 ஓட்டங்கள், சபீர் ரஹ்மான் 2 ஓட்டங்கள் என அடுத்தடுத்து வெளியேறி அதிர்ச்சி அளித்தனர்.



இதனால் வங்கதேச அணி ஒரு கட்டத்தில் 3 விக்கெட் இழப்பிற்கு 22 ஓட்டங்கள் எடுத்து தடுமாறிக் கொண்டிருந்தது. அதன் பின் வந்த ரஹீம் சற்று நேரம் தாக்கு பிடித்தார் இருந்த போதிலும் ரஹீம் 22 ஓட்டங்களில் வெளியேற, வங்கதேச அணி ஆட்டம் காண ஆரம்பித்தது.


இருந்த போதிலும் தனி ஒருவனாக மகமதுல்லா அரைசதம் கடந்து அணியின் வெற்றிக்கு போராடிக் கொண்டிருந்தார். அப்போது இலங்கை அணிக்கு புதுமுக வீரராக தேர்வு செய்யப்பட்ட சேஹன் மதுஷங்க தன்னுடைய 39-வது ஓவரின் 5-வது மற்றும் கடைசி பந்தில் வங்கதேச வீரர் மோர்தசா(5), ரூபுல் ஹோசைனை(0) என தன்னுடைய சிறப்பான பந்து வீச்சில் அடுத்து வெளியேற்றினார்.

இதையடுத்து 41 ஒவரை அவர் வீசவந்த போது, அவருக்கு ஹாட்ரிக் விக்கெட் எடுப்பதற்கான வாய்ப்பு இருந்தது. இதனால் இலங்கை வீரர்கள் அவரை ஊக்கப்படுத்தினார். அதன் படி 41 ஓவரின் முதல் பந்தில் மகமதுல்லா 76 ஓட்டங்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.

இதன் மூலம் தன்னுடைய அறிமுக போட்டியிலே சேஹன் மதுஷங்க ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அசத்தியுள்ளார். அதுமட்டுமின்றி முத்தரப்பு தொடருக்கான கிண்ணத்தையும் இலங்கை அணி கைப்பற்றியுள்ளது.