Sunday, February 25, 2018

How Lanka

மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி

தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது.

இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி கேப்டவுனில் நடைபெற்றது. அதன் படி நாணய சுழறசியில் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது.

இந்திய அணியில் தலைவர் விராட் கோஹ்லிக்கு ஓய்வளிக்கப்பட்டு, அவருக்கு பதிலாக தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டார். ரோகித் சர்மா தலைவராக செயல்பட்டார்.
இந்திய அணியின் சார்பில் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும், ஷிகர் தவானும் களமிறங்கினர். இரண்டாவது ஓவரில் ரோகித் சர்மா 8 பந்துகளில் 2 பவுண்டரியுடன் 11 ஓட்டங்களில் வெளியேறினார்.

அவரை தொடர்ந்து களமிறங்கிய சுரேஷ் ரெய்னா தவானுடன் ஜோடி சேர்ந்தார். ரெய்னா அதிரடியாக ஆடினார். இவர் 27 பந்துகளில் ஒரு சிக்சர், 5 பவுண்டரியுடன் 43 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது அணியின் எண்ணிக்கை 79 ஆக இருந்தது.

இதையடுத்து, மணீஷ் பாண்டே இறங்கினார். அவர் 10 பந்துகளில் ஒரு சிக்சருடன் 13 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தார். அவரை தொடர்ந்து ஹர்திக் பாண்ட்யா களமிறங்கினார்.


விக்கெட்டுகள் ஒருபுறம் வீழ்ந்தாலும், ஷிகர் தவான் ஓரளவு தாக்குப்பிடித்தார். ஆனால் அவர் 40 பந்துகளில் 3 பவுண்டரியுடன் 47 ஓட்டங்கள் எடுத்து ரன் அவுட் ஆனார். அப்போது அணியின் எண்ணிக்கை 126 ஆக இருந்தது. டோனி 11 பந்துகளில் 12 ஓட்டங்களும், தினேஷ் கார்த்திக் 13 ஓட்டங்களும், பாண்ட்யா 21 ஓட்டங்களும் எடுத்து அவுட்டாகினர்.

இறுதியில், இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 172 ஓட்டங்கள் எடுத்தது. அக்சர் படேல் ஒரு ஓட்டமும், புவனேஷ்வர் குமார் 3 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.

தென் ஆப்ரிக்கா சார்பில் ஜூனியர் டாலா 3 விக்கெட்டும், மாரிஸ் 2 விக்கெட்டும், ஷம்சி ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து கடின இலக்கை துரத்திய தென் ஆப்பிரிக்கா அணிக்கு துவக்க வீரர்களாக ரீசா ஹெண்டிரிக்ஸ், டேவிட் மில்லர் களமிறங்கினர்.


ஹெண்டிரிக்ஸ் 7 ஓட்டங்கள் எடுத்த நிலையில் புவனேஷ்வர் குமார் பந்து வீச்சில் வெளியேறினார். அடுத்து அந்த அணியின் தலைவர் டுமினி, மில்லருடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை கொடுத்தார்.

மில்லர் 24 ஓட்டங்களில் வெளியேற, கடந்த போட்டியில் அசத்திய கலாசன் இந்த போட்டியில் 7 ஓட்டங்களில் வெளியேறி அதிர்ச்சி அளித்தார்.

தென் ஆப்பிரிக்கா அணிக்கு ஒரு புறம் விக்கெட்டுகள் வீழுந்தாலும், தலைவரான டுமினி தன்னுடைய அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார்.

இதனால அரைசதம் கடந்த அவர் 55 ஓட்டங்களில் தாகூட் பந்து வீச்சில் ரோகித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

அப்போது தென் ஆப்பிரிக்கா அணி 16 ஓவருக்கு 109 ஓட்டங்கள் எடுத்திருந்ததால், இந்திய அணி எளிதாக வெற்றி பெற்றுவிடும் என்ற போது, யாரும் எதிர்பார்க்காத வகையில் கிறிஸ்டியன் ஜோன்க்கர் அதிரடி ஆட்டத்தை காட்ட ஆரம்பித்தார்.

தாகூர் ஓவரில் பவுண்டரி மற்றும் சிக்ஸர்களை பறக்க விட்ட தாகூர், இந்திய அணிக்கு தோல்வி பயத்தை காட்டினார்.


தாகூர், பூம்ரா ஆகியோர் பந்துகளை ஜோன்க்கர் வெளுத்து வாங்க, கடைசி ஓவரில் அணியின் வெற்றிக்கு 19 ஓட்டங்கள் தேவைப்பட்டது.

ஆனால் அனுபவ பந்து வீச்சாளரான புவனேஷ்வர் குமார் சிறப்பாக பந்து வீசி இன்றைய போட்டியின் ஹீரோவாக மாறினார்.

இறுதியாக தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 165 ஓட்டங்கள் எடுத்து 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் வென்று அசத்தியுள்ளது.