Monday, February 26, 2018

How Lanka

கொத்து கொத்தாக மடியும் குழந்தைகள் சிரியாவில் தொடரும் கொடூரங்கள்

சிரியாவில் கிழக்கு கூட்டா பகுதி மீது அரசு படை நடத்தி வரும் தாக்குதலில் ஏராளமான குழந்தைகள் இறந்த நிலையில், அங்கிருக்கும் சிறுவன் ஒருவன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சிரியாவில் கடந்த 2011-ஆம் ஆண்டு ஜனாதிபதி பஷார் அல் அசாத் படைகளுக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே துவங்கிய சண்டை இன்றுவரை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தலைநகர் டமாஸ்கஸ் அருகே போராட்டக்காரர்களின் கிழக்கு கூட்டா பகுதி மீது அரசு படை நடத்திய தாக்குதுலில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 500 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

ஏராளமானோர் படுகாயம் அடைந்துள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என கூறப்பட்டது.

இதில் 120-க்கும் மேற்பட்ட குழந்தைகள் அடங்குவர் என சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. இச்சம்பவம் உலகையே உலுக்கி உள்ள நிலையில் கொத்து கொத்தாக குழந்தைகள் கொல்லப்பட்ட குழந்தைகள் தொடர்பான புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி அனைவரது கண்களிலும் கண்ணீர் வரவழைத்தது.

இதையடுத்து அங்கிருக்கும் முகமத் நஜிம்(15) என்ற சிறுவன், நான் பஷார் அல் ஆசாத் செய்யும் குற்றங்களை உங்களிடம் கொண்டு வர போகிறேன். மக்கள் குண்டுவீச்சுகளுக்கு இடையில் பசியுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இங்கு நடப்பதை வார்த்தைகளால் விவரிப்பது கடினமானது. இங்கு இன அழிப்பு நடந்துக் கொண்டிருக்கிறது. நூற்றுக்கும் மேற்பட்ட மக்களும், குழந்தைகளும் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

நாங்கள் இப்பகுதியில் சிரிய அரசையும், ரஷ்யாவையும் போர் நிறுத்தம் கொண்டுவர வலியுறுத்தி வருகிறோம். இதுதான் எனது கருத்தும் இங்குள்ள குழந்தைகள் கருத்தும்.


உங்கள் மனசாட்சிக்கே நாங்கள் விட்டுவிட்டோம். நாங்கள் அமைதியாக வாழவேண்டும். நாங்கள் தொடர்ந்து உங்கள் அமைதியால் கொல்லப்பட்டு கொண்டிருக்கிறோம்.

பஷார் அல் ஆசாத், புதின், கொமைனி எங்களது குழந்தைப் பருவத்தைப் கொல்கிறார்கள். எங்களைக் காப்பாற்றுங்கள் ஏற்கனவே மிகுந்த தாமதமாகிவிட்டது என்று கூறியுள்ளான்.