Saturday, February 17, 2018

How Lanka

பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறி வைக்கப்படுகின்றார் - நாமல் ராஜபக்ச தெரிவிப்பு

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதவியில் இருந்து இறக்கும் நடவடிக்கை உள்ளாட்சி தேர்தலுக்கு முன்னரே மேற்கொள்ளப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்திருக்கும் கருத்து கொழும்பு அரசியல் தளத்தில் புது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தேர்தலில் இரண்டு பிரதான கட்சிகளும் செல்வாக்கு இழந்துள்ளதன் வெளிப்பாடு என்று அரசியல் அவதானிகள் சொன்னாலும், இன்றைய தினம் நாமலின் கருத்து புதிய பிரச்சினைக்கான அத்தியாயத்தை திறந்திருப்பதை உணர முடிகிறது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க அமெரிக்க, இந்திய அரசுகளின் அதிகமான ஆதிக்கத்தைக் கொண்டிருப்பவர் என முன்னரே பலமுறை எதிர் தரப்பினர் கருத்துக்களைக் கொண்டிருந்தனர்.

இதனால், அவரை பதவியில் இருந்து நீக்குவதற்கு எதிர்க் கட்சிகள் சீனாவுடன் இணைந்து பிரதமர் பதவிக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தலாம் என்ற முடிவில் வேலைத்திட்டங்களை ஆரம்பித்திருக்கின்றனவா? என்று சில தரப்புக்கள் பேசத் தொடங்கியிருக்கிறார்கள்.

இதற்கான வாய்ப்பாக தேர்தல் தோல்வியை முன்வைத்து மேற்கொள்ளப்படும் சூழ்ச்சியா என்றும் நோக்க வேண்டியிருக்கிறது. ரணில் பதவி விலகப் போகின்றார் என்ற தகவல் வெளியாகி சில மணிநேரங்களில் இந்தியத் தூதுவரும், அமெரிக்கத் தூதுவரும் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.

இதேவேளை, பிரதமரும், ஜனாதிபதியும் இது குறித்துப் பேசியிருக்கின்றனர். இதன் பின்னர் ஜனாதிபதிக்கான நெருக்கடிகள் குறித்து ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டத்தில் ரணில் விளக்கியிருக்கிறார். ஜனாதிபதிக்கும் அழுத்தங்கள் ஆணித்தரமாக கொடுக்கப்படுவதை ரணிலும் உணர்ந்திருக்கிறார்.

ஆக, பெரும் சூழ்ச்சிகள் நடந்து கொண்டிருப்பதனை வெளிப்படையாக உணர முடிகிறது. ஐக்கிய தேசியக் கட்சியில் இருக்கும் சிலரும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இருக்கும் முக்கிய உறுப்பினர்களும் பிரதமரை கீழே விழுத்தும் முயற்சியில் மும்முரமாக ஈடுபடுகின்றார்கள் என்பது வெளிப்படையானதாக இருக்கிறது.

இதற்கிடையில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஆட்சி அமைய வேண்டும் என்று விரும்புபவர்கள் மைத்திரிக்கு அழுத்தம் கொடுத்து பிரதமரை விலக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

இதற்கு இன்னுமொருபடி மேலே சென்று பேசிய நாமல், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் எந்த உறுப்பினரை பிரதமராக தேர்வு செய்தாலும் மைத்திரி தலைமையிலான அரசுக்கு ஆதரவளிப்பதாக குறிப்பிட்டுப் பேசியிருக்கிறார்.

ஆக, எல்லா வகையிலும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறி வைக்கப்படுகின்றார் என்பதும் நிதர்சனமாகியிருக்கிறது.

இதுவொருபுறமிருக்க, 19 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின்படி, பிரதமரைப் பதவி நீக்கம் செய்யும் அதிகாரம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இல்லை என்று ஜனநாயகத்துக்கான சட்டவாளர்கள் அமைப்பு தெரிவித்திருக்கின்றன.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதவி நீக்கம் செய்வது குறித்து சட்டமா அதிபரின் ஆலோசனையை பெறவுள்ளதாக மைத்திரிபால சிறிசேன, நேற்று கூட்டு எதிரணியினருக்கு உறுதியளித்திருந்தார்.

இதுதொடர்பாக ஜனநாயகத்துக்கான சட்டவாளர்கள் என்ற அமைப்பின் சார்பில், சட்டவாளர்கள் லால் விஜேநாயக்க, கே.எஸ்.இரத்னவேலு, சுதத் நெத்சிங்க, பிரபோத ரத்நாயக்க, ஹரின் கோமிஸ் ஆகியோர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அதில் “19 ஆவது திருத்தத்துக்கு முன்னர், பிரதமரைப் பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருந்தது. ஆனால், 19 ஆவது திருத்தச்சட்டத்தின் மூலம், அந்த அதிகாரம் நீக்கப்பட்டுள்ளது,

எனவே நாடாளுமன்ற வழக்கத்தின்படி, நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றைக் கொண்டு வந்து நிறைவேற்றுவதன் மூலமே, பிரதமரைப் பதவி நீக்கம் செய்ய முடியும். இதில் சிறிலங்கா அதிபர் எந்தப் பங்கையும் வகிக்க முடியாது.” என்று தெரிவித்துள்ளனர்.

அதேவேளை, கொழும்பு பல்கலைக்கழக சட்ட பீடத்தின் மூத்த விரிவுரையாளரான கலாநிதி பிரதீப மகாநாமஹேவவும், பிரதமரைப் பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை என்று கூறியிருக்கிறார்.

இதற்கிடையே பிரதமரை ஜனாதிபதி பதவி நீக்கம் செய்ய முடியுமா என்பது பற்றிய சட்ட விளக்கத்தைக் கோர, உச்சநீதிமன்றத்தை நாடுவதற்கு சில சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிய வந்திருக்கிறது.

இப்போதைக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவருவதற்கு தென்னிலங்கை அரசியல் முக்கியஸ்தர்கள் குறிப்பாக இளம் அரசியல் தலைவர்கள் முயற்சிப்பதாக தெரியவந்திருக்கிறது.

எவ்வாறெனினும் தான் பதவியில் இருந்து விலகப் போவதில்லை என்றும் அனைத்தையும் எதிர் கொள்ளத் தயார் என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.