Tuesday, March 6, 2018

How Lanka

அம்பாறையில் டயர்கள் எரிப்பு! பஸ்கள் மீது கல் வீச்சு

நாடளாவிய ரீதியில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்றுவரும் வன்முறைகளையும் கண்டித்து அம்பாறை மாவட்ட மக்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

அம்பாறை மாவட்டத்தில் அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, பாலமுனை, ஒலுவில் கல்முனை சாய்ந்தமருது, மருதமுனை மற்றும் முஸ்லிம் மக்கள் வாழும் பல பிரதேசங்களிலும் கடைகள் அடைக்கப்பட்டு வீதிகளில் டயர்

போட்டு தடையேற்படுத்தி வருவதனையும் அவதானிக்க முடிகின்றது.

அத்துடன் மக்கள் மத்தியில் அச்சநிலை மேலோங்கி இருப்பதனையும் அவதானிக்க முடிகின்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

பல முஸ்லிம் பிரதேசங்களில் பூரண ஹர்த்தாலுடன், கடையடைப்பும் அமைதியான முறையில் இடம்பெற்று வருகின்றது.

இதனால் குறித்த பிரதேசங்களிலுள்ள பாடசாலைகள், வங்கிகள், எரிபொருள் நிரப்பும் நிலையங்கள், கடைகள் போன்றன மூடப்பட்டும், வைத்தியசாலைகள், அரச நிறுவனங்கள் இஸ்தம்பிதம் அடைந்தும் காணப்படுகின்றன.


இந்த நிலையில், மருதமுனை பிரதேசத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான இரண்டு பஸ்கள் மீது கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதனால் பஸ்ஸின் கண்ணாடிகள் உடைந்த நிலையில் குறித்த பஸ்கள் கல்முனை பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து செல்லப்பட்டிருந்தன.

இதனைத் தொடர்ந்து கல்முனையில் இருந்து மட்டக்களப்பு, அம்பாறை மற்றும்அக்கறைப்பற்றுக்கான பஸ் போக்குவரத்துகள் இடம்பெறவில்லை.

அதேவேளை மருதமுனையில் கல்முனை - மட்டக்களப்பு நெடுஞ்சாலையில் டயர்கள் எரிக்கப்பட்டும் மரக்குற்றிகள் மற்றும் கொங்க்ரீட் தூண்கள் போடப்பட்டும்வீதித் தடைகள் ஏற்படுத்தப்பட்டன.

இதனால் போக்குவரத்துகள் முற்றாக தடைப்பட்டிருந்த. அத்துடன் அங்கு இளைஞர்கள் ஒன்றுதிரண்டு கண்டனப் பேரணி ஒன்றையும் நடத்தினர்.

இந்த நிலையில் மருதமுனை பிரதேசத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களை கலைப்பதற்காக விசேட அதிரடிப்படையினரால் கண்ணீர்ப்புகை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பெருந்திரளான இளைஞர்கள் அங்கு திரண்டு கண்டனப் பேரணியை நடத்தியதுடன் தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டிருந்தனர்.

இவர்களை கலைப்பதற்கு பொலிஸார் மேற்கொண்ட முயற்சி பயனளிக்காமையினால் விசேட அதிரடிப் படையினரும் இராணுவத்தினரும் வரவழைக்கப்பட்டு முற்பகல் 11.30 மணியளவில் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன், இதன்போது சிலர் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.