Tuesday, April 17, 2018

How Lanka

மக்கள் நலன்களை முன்னிறுத்தி சேவையாற்றுங்கள் - டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து

தேர்தல் காலத்திலும் அதன் பின்னரான உள்ளூராட்சி மன்றங்களை அமைக்கும் காலத்திலும் கட்சிகளுக்கிடையே ஏற்பட்ட கசப்பான சம்பவங்களை தொடர்ந்தும் முன்னிறுத்திக் கொண்டிராது மக்களுக்கான சேவைகளைச் செய்ய அனைத்து தரப்பினரும் முன்வரவேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்துள்ளார்.

வவுனியா நகரசபையின் ஆட்சி அமைப்பின்போது நடைபெற்ற சம்பவங்கள் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டியவை என்றே கருதுகின்றேன். மனக் கசப்புக்களை முன்னிறுத்தாது சபைகளின் அதிகாரத்தை பெற்றுள்ள அனைத்து தரப்பினரும் தாம் மக்களுக்கான சேவையை கருத்தில்கொண்டு மக்களின் வாழ்வியல் மேம்பாட்டுக்காக ஒருமித்து செயலாற்ற வேண்டும்.

அவ்வாறான ஒரு சூழ்நிலை உருவாகும் போதே தமிழ் மக்கள் எதிர்பார்த்த பலாபலன்களை ஓரளவேனும் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும் என நம்புகின்றேன்.

மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றிக் கொடுக்காமல் எந்த தரப்பினராலும் அரசியல் காழ்ப்புணர்ச்சிகளுடன் இருந்து முரண்பட்டுக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. அந்தவகையில் சபைகளை பொறுப்பேற்ற அனைவரும் தேவயைற்ற முரண்பாடுகளையும் தனிப்பட்ட வன்மங்களையும் கைவிட்டு மக்கள் நலன்களை முன்னிறுத்தி செயலாற்ற வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இச்செய்தியானது எமது செய்திப்பிரிவின் மின்னஞ்சலுக்கு அனுப்பிவைக்கப்பட்டவை.