Saturday, April 14, 2018

How Lanka

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையினை உடனடியாக கூட்டு - விலாடிமிர் புட்டின்

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையினை உடனடியாக கூட்டுமாறு ரஷ்ய ஜனாதிபதி விலாடிமிர் புட்டின் அவசர அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளார்.

விசேட அறிவித்தல் ஒன்றின் மூலம் இன்று அவர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிரித்தானியாவுடன் இணைந்து அமெரிக்க தலைமையில் மேற்கு நாடுகளின் கூட்டணி சிரியாவின் டமஸ்கஸ் நகரின் பல இடங்களை இலக்கு வைத்து விமானத் தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்நிலையிலேயே, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையினை இன்று (14) கூட்டுமாறு, ரஷ்யா அவசர வேண்டுகோளை விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சிரியாவில் எஸ்-300 ரக ஏவுகணை தடுப்பு உபகரணங்களைப் பெற்றுக் கொள்வது குறித்து கவனம் செலுத்தப்படும் எனவும் ரஷ்யா இன்று விடுத்துள்ள விசேட அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

“அமெரிக்காவினதும் அதன் நேச நாடுகளினதும் ஆக்கிரமிப்பு நடவடிக்கை தொடர்பில் கலந்துரையாடுவதற்கு ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையை அவசரமாக கூட்டுங்கள்” என ரஷ்ய ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

சிரியா மற்றும் அதன் பகுதிகளில் தற்பொழுது ஏற்பட்டுள்ள நிலைமையினால் அந்நாட்டுடனான அனைத்து சர்வதேச தொடர்புகளுக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி விடுத்துள்ள அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.