Wednesday, April 11, 2018

How Lanka

ரஷ்யாவை கடும் சொற்களால் வெருட்டிய டிரம்ப்

ரஷ்யாவின் கூட்டாளியான சிரியா அரசு நடத்தியதாக கூறப்படும் தாக்குதலுக்கு பதிலடி வழங்கப்படும் என்று கடும் சொற்களால் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சிரியா அரசு நடத்தியதாக கூறப்படும் தாக்குதல் இரசாயன ஆயுத தாக்குதலாக அறிக்கையிடப்பட்டுள்ளது.

வார இறுதியில் நடைபெற்றதாக கூறப்படும் இரசாயன தாக்குதலுக்கு பதிலடியாக சிரியாவில் ஏவுகணை தாக்குதலை சந்திக்க ரஷ்யா தயாராக வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

சிரியாவில் நடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இரசாயன தாக்குதலுக்கு பதிலடியாக வழங்கப்படும் அமெரிக்காவின் எந்தவொரு தாக்குதலையும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாக ரஷ்யாவின் மூத்த தலைவர்கள் மிரட்டியுள்ளனர்.

இந்த தாக்குதல் தொடர்பாக கடும் பதிலடி வழங்கப்படும் என்று டிரம்ப் முன்னதாக உறுதி அளித்துள்ளார்.

ரஷ்யாவின் இராணுவ ஆதரவு பெறுகின்ற அதிபர் பஷார் அல் அசாத்தின் அரசு, எந்தவொரு இரசாயன தாக்குதலுக்கு பின்னாலும் தாங்கள் இருப்பதாக கூறப்படுவதை மறுத்துள்ளது.

அதிபர் பஷார் அல் அசாத்தை குறிப்பிடும் வகையில், இரசாயனத்தால் கொல்லும் விலங்கோடு" ரஷ்யா நட்புறவு கொண்டிருக்கக் கூடாது என்று அதிபர் டிரம்ப் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, சிரியாவை தாக்கும் அமெரிக்க ஏவுகணைகளை தனது நாடு சுட்டு அழிக்கும் என்று லெபனானிலுள்ள ரஷ்ய தூதர் தெரிவித்திருக்கிறார்.