வவுனியா, மன்னார் வீதியில் அமைந்துள்ள காமினி மகா வித்தியாலயத்திற்கு முன்பாக பல்கலைக்கழக மாணவர்கள் 100இற்கும் மேற்பட்டவர்கள் இன்றைய தினம் ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொள்வதற்கு தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
வவுனியா வளாகத்தின் பம்பைமடுவில் அமைந்துள்ள வியாபார கற்கைகள் பீடத்தில் கல்வி பயிலும் சிங்கள மாணவர்கள் அங்கு புத்தர் சிலை ஒன்றை நிறுவுவதற்கு அதற்கான கூட்டை கடந்த சில வாரங்களுக்கு முன் அமைத்திருந்தனர்.
பல்கலைக்கழகத்தில் அனுமதி பெறாது மாணவர்கள் மேற்கொண்ட இந்த முயற்சியை பல்கலைக்கழக நிர்வாகம் தடுத்து நிறுத்தியது. இதன்போது சிங்கள மாணவர்களால் பல்கலைக்கழக நிர்வாகத்தினருக்கு அச்சுறுத்தல் விடப்பட்டது.
பார்க் வீதியிலுள்ள வளாக அலுவலகத்தின் வாயில் கதவைப் பூட்டி சிங்கள மாணவர்கள் எதிர்ப்பை வெளியிட்டதால் பதற்ற நிலை ஏற்பட்டு வவுனியா வளாகம் காலவரையரையின்றி மூடப்பட்டது.
அதனையடுத்து இவ் குழப்பத்திற்கு காரணமான மாணவர்களுக்கு எதிராக நிர்வாகம் ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ள தயாரான நிலையில் அதனை நிறுத்துமாறு கோரியே இன்றைய தினம் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.