Wednesday, May 23, 2018

How Lanka

வீரவங்சவை கடுமையாக எச்சரித்த சபாநாயகர் கரு ஜயசூரிய

நாடாளுமன்றத்தை நாடக மேடையாக்கிக் கொள்ள முயற்சிக்க வேண்டாம் என்று விமல் வீரவங்சவை சபாநாயகர் கரு ஜயசூரிய கடுமையாக எச்சரித்துள்ளார்.

நேற்றைய மாலை நாடாளுமன்ற அமர்வின் போது இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.

குறித்த அமர்வில் ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்புவதற்காக விமல் வீரவங்ச பல தடவைகள் முயற்சித்த போதிலும் அவரது ஒலிவாங்கி செயற்படவில்லை. இதனையடுத்து அவர் உரத்த குரலில் ''சபாநாயகரே'' என்று அழைத்தார்.

விமலின் அழைப்பு சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு கடுமையான எரிச்சலை ஏற்படுத்திய நிலையில் அவர் விமலின் ஒழுங்குப்பிரச்சினைக்கு இடமளித்தார். எனினும் விமல் முன்வைத்த விடயம் ஒழுங்குப்பிரச்சினை சாராது என்று தள்ளுபடி செய்யப்பட்டது.

இதனையடுத்து விமல் வீரவங்சவை நோக்கி கடுமையான எச்சரிக்கை விடுத்த சபாநாயகர், ''நாடாளுமன்றத்தை நாடக மேடையாக்கிக் கொள்ள முயற்சிக்க வேண்டாம். இதற்கென்று ஒரு பாரம்பரியம் உள்ளது.

அந்த மரியாதை கெட இடமளிக்க முடியாது. அத்துடன் சபாநாயகரை அழைப்பதற்கும் ஒரு முறை இருக்கின்றது. என்னை மீறி நீங்கள் செயற்பட முடியாது'' என்று கடுந்தொனியில் எச்சரிக்கை விடுத்தார்.

இதனையடுத்து விமல் வீரவங்ச மௌனமாக உட்கார்ந்து கொண்டுள்ளார்.