Tuesday, May 22, 2018

How Lanka

காணாமல் போனவர்களின் உறவினர்களிற்கும் யஸ்மின் சூக்காவிற்குமிடையில் நேரடி உரையாடல்


மகளிர் விவகார அமைச்சர் திருமதி அனந்தி சசிதரனின் ஏற்பாட்டில் காணாமல் போனவர்களின் உறவினர்களிற்கும் யஸ்மின் சூக்காவிற்குமிடையில் நேரடி உரையாடல் இடம்பெற்றது.



இலங்கையில் இடம்பெற்ற இறுதிப் போரில் மே 18ம் திகதி இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களிற்கும் ஜக்கிய நாடுகள் செயலாளரால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் உறுப்பினரும், சர்வதேச உண்மைகள் மற்றும் நீதிக்கான செயற்திட்ட பணிப்பாளர் ஜஸ்மின் சூக்காவிற்கும் இடையிலான ஸ்கைப் மூலமான கலந்துரையாடல் வடமாகாண மகளிர் விவகார, புனர்வாழ்வளித்தல் அமைச்சர் திருமதி அனந்தி சசிதரன் தலைமையில் அமைச்சர் அலுவலக மாநாட்டு மண்டபத்தில் புதன் கிழமை பி.ப 02.00மணிக்கு இடம்பெற்றது.

இச் சந்திப்பில் அனந்தி சசிதரன் தெரிவித்ததாவது : காணாமல் போன உறவுகளான நாங்கள் இன்று ஒன்பது வருடங்கள் கடந்தும் நீதிக்கான போராட்டத்தை நடாத்திக் கொண்டிருக்கிறோம். இலங்கை அரசாங்கம் சர்வதேசத்தை ஏமாற்றுகின்ற வகையில் எல்.எல்.ஆர்.சி எனும் திட்டத்தைக் கொண்டிருந்தது. அதற்கும் நாங்கள் சாட்சி கொடுத்திருந்தோம்.

அடுத்து ஜனாதிபதி ஆணைக்குழுவிலும் சாட்சி கொடுத்திருந்தோம். இன்று இலங்கை உயர் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்து சுமார் ஆறு வருடங்கள் கடந்தும் தொடர் போராட்டமாக உள்நாட்டு பொறிமுறைகளில் தோற்றி, அதில் நீதி கிடைக்காததால் தான்; இன்று சர்வதேசத்தையும் ஐக்கிய நாடுகள் சபையையும் நாடிநிற்கின்ற நிலைமை உருவாகியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபைகூட பாதிக்கப்பட்ட தரப்பாக எங்கள் கருத்துக்களுக்கு செவிசாய்க்காது அரசிற்கு சார்பாக ஏனெனில் நாங்கள் சர்வதேச விசாரனை வேண்டும் என்ற போது கலப்பு நீதிமன்றம் தருவதாகக் கூறிவிட்டு

இறுதியில் அதையும் நிறைவேற்றாது தற்போது ஓர் வெறும் கண்துடைப்பிற்காக காணாமல் போனோர் அலுவலகத்தை ஸ்தாபிப்பதாக கூறியுள்ளார்கள். இவ் அலுவலகத்தின் தலைவராக நியமிக்கப்பட்டவர் பெரும்பான்மையினத்தைச் சேர்ந்தவர் மட்டுமன்றி கடந்த காலங்களில் நாம் சர்வதேச விசாரனை மற்றும் அரசிற்கு இரண்டு வருட கால அவகாசம் வழங்கக்கூடாது

என வலியுறுத்திய போது உள்நாட்டுவிசாரனை மற்றும் இரண்டு வருட கால அவகாசம் நல்லாட்சி அரசாங்கத்திற்கு வழங்க வேண்டும்  என தன் குரல்களை அரசிற்கு பக்கச் சார்பாகக் கொண்டு செயற்பட்டவராக இருக்கிறார். எனவே இவர் அரசாங்கத்தின் பிரதிநிதியாக இருந்து கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு எவ்வாறு நீதியை பெற்றுத்தருவார் என்ற ஐயம் எல்லோர் மனதிலும் ஏற்பட்டுள்ளது.

உண்மைகள் வெளிவர வேண்டும். இதற்கு இலங்கை அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டும் என்பதற்காகவே தொடர்ந்து நாம் போராடிக்கொண்டிருக்கிறோம். பாதிக்கப்பட்டவர்களுக்கு அனுசருனையாக நீங்கள் எடுத்துக்கொண்ட முயற்சி நிச்சயமாக நீதியை பெற்றுத்தரும் என நம்புகிறோம் என தெரிவித்திருந்தார்.

காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் கருத்துக்களை கேட்டறிந்த யஸ்மின் சூக்கா அக் கருத்துக்கள் தொடர்காகவும் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியிருந்ததுடன் இலங்கை அரசாங்கமானது காணாமல் போனோர் விடயத்தில் தொடர்ந்து தட்டிக்கழிப்பு செய்யுமானால் இலங்கைக்கு எதிராக சர்வதேச நீதிமன்றில் வழக்கொன்றை தாக்கல் செய்ய தீர்மானம் எடுத்துள்ளதாக தெரிவித்தமை குறிப்பிடத்தக்கதாகும். மற்றும் காணாமல் போனோர் தொடர்பாக உறுதியான நிச்சயத்தன்மையான தரவுத்தளத்தின் அவசியத்தையும் எடுத்துரைத்தார்.

இதற்குப்பதிலளித்த அனந்தி சசிதரன் காணாமல் போனோர் பட்டியலானது 1990இலிருந்து  தொடர்கிறது. குறிப்பாக இறுதியுத்தத்தின்போது காயப்பட்டவர்களை ஏற்றிச் சென்றவர்கள், வைத்திய சாலையிலிருந்து இராணுவப்புலனாய்வாளர்களால் கடத்தப்பட்டவர்கள் என காணாமல் ஆக்கப்பட்டவர்கள் ஒர் இனம் போல தோற்றம் பெற்றுள்ளார்கள்.

இவர்களது உறவினர்களது வலி வார்த்தைகளால் கூறமுடியாதவை. இவர்கள் தொடர்பாக கடந்தகாலங்களில் மேற்கொள்ளப்பட்ட பதிவுகள் தங்களுக்க உரிய அமைப்பில் வடிவமைக்கப்பட்டு கடந்த காலங்களில் அனுப்பிவைக்கப்பட்டதைப் போன்று இனிவரும் காலங்களிலும் தரவுகள் திரட்டப்பட்டு தங்களுக்கு அனுப்பிவைக்கப்படும். மக்களும் தகவல்களை பதிந்த வண்ணம் உள்ளனர் என பதிலளித்தார்.