அரசியலமைப்பின் 19வது திருத்தச் சட்டத்திற்கு அமைய ஜனாதிபதி தேவைப்படும் பட்சத்தில் பொருத்தமான ஒருவரை பதில் பிரதமரை கூட நியமிக்க முடியாத காரணத்தினால், மகிந்த ராஜபக்ச ஜனாதிபதி பதவியை மட்டுமல்ல பிரதமர் பதவிக்கும் தெரிவாக முடியாத சட்ட முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
பேராதனை பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞான போராசிரியரும் புதிய அரசியலமைப்புச் சட்டம் தொடர்பாக மக்களின் கருத்தறியும் குழுவின் உறுப்பினருமான உபுல் அபேரத்ன தெரிவித்துள்ளார்.
இது 19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தில் உள்ள விசேடமான நிலைமை. இது குறித்து உயர் நீதிமன்றத்திடம் சட்டவிளக்கத்தை அறிய வேண்டியது ஜனாதிபதியின் கடமை. 19வது திருத்தச் சட்டத்திற்கு அமைய இரண்டு முறை ஜனாதிபதியாக பதவி வகித்தவர் அந்த பதவிக்கு மூன்றாவது முறையாக தெரிவாக முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே இரண்டு முறை ஜனாதிபதியாக தெரிவான ஒருவர் மீண்டும் ஜனாதிபதியாக பதவிக்கு வர முடியாது என்றாலும் ஜனாதிபதி பதவி விலகினால், நீக்கப்பட்டால் அல்லது உயிரிழந்தால் ஏற்படும் வெற்றிடத்திற்கு இரண்டு முறை ஜனாதிபதியாக இருந்த வரை ஜனாதிபதியாக நியமிப்பதில் 19வது திருத்தச் சட்டத்திற்கு அமைய தடையில்லை என சட்டத்தரணியான நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இதனிடையே கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் வாசுதேவ நாணயக்கார, தினேஷ் குணவர்தன, திஸ்ஸ விதாரண போன்ற பழைய இடதுசாரி தலைவர்கள் கூட்டு எதிர்க்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபாய ராஜபக்ச நிறுத்தப்படுவதை விரும்பவில்லை.
அதேபோல் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உயர்மட்ட உறுப்பினர்களும் கோத்தபாய ராஜபக்ச வேட்பாளராக நிறுத்தப்படுவதை விரும்பவில்லை என கூறப்படுகிறது.