புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் இயக்க உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வு அதிகார சபையினால வழங்கப்பட்டதாக கூறப்படும் கடனை இரத்து செய்வதற்கு அல்லது புனர்வாழ்வு அதிகார சபையின் மூலமாக ஓர் ஏற்பாடு செய்து வங்கிக்கு செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க முடியுமா? என மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து மத விவகாரங்கள் கௌரவ அமைச்சர் டி. எம். சுவாமிநாதன் அவர்களிடம் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றில் இன்றையதினம் நடைபெற்ற 23ஃ2 நியதி கேள்வி நேரத்தில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கேள்வியெழுப்பியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் –
யுத்த முடிவின் பின்னர், புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் இயக்க உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வு அதிகார சபையினால், ஒருவருக்கு சுமார் 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா வீதம் நிதி வழங்கப்பட்டதாகவும், மேற்படி நிதி மானிய அடிப்படையில் வழங்கப்படுவதாகக் கூறப்பட்டே அப்போது, புனர்வாழ்வளிப்பு செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினரால், மாவட்ட செயலகங்களில் வைத்து கடந்த 2013ஆம் வருடம் பெப்ரவரி மாதம் 21ஆம் திகதி வழங்கப்பட்டதாகவும், இந்த நிதியானது வங்கிக் கடன் எனத் தங்களுக்கு அறிவுறுத்தப்படவில்லை என்றும் தெரிவித்துள்ள புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் இயக்க உறுப்பினர்கள், மேற்படி நிதியை தவணை முறையில் செலுத்தத் தவறியமைக்காக, இலங்கை சேமிப்பு வங்கியின் அறிவுறுத்தலுக்கு அமைவாக சட்டத்தரணி ஒருவரால் 2018. 01. 11 ஆம் திகதியைக் கொண்ட கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும், அக் கடிதத்தின் பிரகாரம் 14 நாட்களுக்குள் முழுத் தொகையினையும் செலுத்தத் தவறின், சட்ட வட்டி மற்றும் வழக்குச் செலவு என்பவற்றுடன் சேர்த்து முழுத் தொகையையும் அறவிடுவதற்கான சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளனர்.
மேற்படி நிதியானது வங்கிக் கடன் என்கின்ற அறிவுறுத்தல்கள் இன்றியே, ஓர் அரசியல் ஏற்பாடாக அப்போது வழங்கப்பட்டதாகவே கருதுகின்ற மேற்படி முன்னாள் இயக்க உறுப்பினர்கள், தற்போது பொதிய வேலைவாய்ப்புகள் இன்றி, பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கியிருக்கின்ற நிலையில், தங்களால் மேற்படி நிதியை செலுத்துவதற்குரிய மார்க்கங்கள் இல்லை என்றே தெரிவிக்கின்றனர். எனவே, இவர்களது நிலைமையினை அவதானத்தில் கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.