Saturday, May 19, 2018

How Lanka

இலங்கையின் அடுத்த ஜனாதிபதி குமார் சங்கக்கார?

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் இலங்கை அணித் தலைவர் குமார் சங்கக்காரவை களமிறக்க திட்டமிட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

அன்னம் சின்னத்தின் பொது வேட்பாளராக சங்கக்காரவை களமிறக்க ஐக்கிய தேசிய கட்சி திட்டமிட்டுள்ளது.

2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில் கோத்தபாயவுக்கு இணையாக குமார் சங்கக்காரவை களமிறக்க வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சர் மற்றும் உறுப்பினர்கள் கோரியுள்ளனர்.

குமார் சங்கக்காரவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்க வெளிநாட்டு ராஜதந்திரிகள் மற்றும் தூதரகங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.

அத்துடன் வடக்கு, கிழக்கு உட்பட சிறுபான்மையினரின் வாக்குகளை இலகுவாக சங்கக்கார ஈர்ப்பார் என ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் கலந்துரையாடியுள்ளனர்.

எனினும் இந்த யோசனை இன்னமும் கலந்துரையாடல் மட்டத்தில் உள்ள நிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் பின்வரிசை உறுப்பினர்கள் இந்த திட்டத்திற்கு இணங்கவில்லை என தெரியவந்துள்ளது.

கட்சியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸவை நியமிப்பதற்கு ஐக்கிய தேசிய கட்சியின் பின்வரிசை உறுப்பினர்கள் திட்டமிட்டுள்ளனர்.

இதேவேளை தற்போதைய நல்லாட்சி அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்தபோது குமார் சங்கக்காரவுக்கு பிரதான நாடொன்றுக்கு வெளிநாட்டு தூதுவர் பதவி வழங்கப்பட்ட போதிலும் அவர் அதனை நிராகரித்தமை குறிப்பிடத்தக்கது.