Monday, May 28, 2018

How Lanka

கண்ணகிக்கு இலங்கையில் ஆலயம் அமைத்த கஜபாகு மன்னன்

ழக்கின் தனித்துவ பெண் தெய்வ வழிபாடாக கண்ணகி அம்மன் வழிபாடு திகழ்கிறது.

பத்தினித் தெய்வமாம் கண்ணகி அம்மனின் வருடாந்த திருக்குளிர்த்திச் சடங்கு கடந்த 21ஆம் திகதி கதவு திறத்தல், கடல் தீர்த்தம் கொணரல், கல்யாணக்கால் நடல் நிகழ்வுகளுடன் ஆரம்பமாகியது.

தொடர்ந்து 07தினங்கள் சடங்கு இடம்பெற்று இன்று 29ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அதிகாலை திருக்குளிர்த்தி பாடலுடன் சடங்கு நிறைவுறுகிறது.

பூம்புகாரைத் தலைநகராகக் கொண்டு சோழ நாட்டிலே பிறந்து, பாண்டிய நாட்டிலே புரட்சி செய்து, சேர நாட்டிலே தெய்வமாகிய கண்ணகை அம்பாள் சிங்கள மக்கள் மத்தியில் பத்தினித் தெய்வமாக வழிபடப்பட்டு வருவதைக் காணலாம்.

வைகாசி பிறந்து விட்டால் கிழக்கின் பட்டிதொட்டியெல்லாம் பறையொலி முழங்க, குழல்நய ஓசையெழுப்ப, வைகாசிப் பொங்கல் நடைபெறுவது வழமையாகும்.

தமிழர் பண்பாட்டு வரலாற்றில் குறித்தவொரு காலகட்டத்து வாழ்வியல் இலட்சியங்களை கோவலன், கண்ணகி, மாதவி ஆகிய பாத்திரங்களின் வாழ்க்கை அனுபவங்களுடாக சிலப்பதிகாரம் வெளிக்காட்டி நிற்கிறது.

ஐம்பெரும் காப்பியங்களுள் தமிழில் உருவான முதல் பெரும் காப்பியம் சிலப்பதிகாரமாகும்.இதனை இளங்கோவடிகள் சிருஷ்டித்திருந்தார்.

சிலப்பதிகாரம் ஒரு சர்வசமய சமரச இலக்கியமான தமிழ்க் காவியமாகவும், இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழையும் ஒருங்கே கூறும் தனிச்சிறப்பு வாய்ந்த முத்தமிழ்க்காப்பியமாகவும் இது விளங்குகின்றது.

கற்பெனும் திண்மையே பெண்களின் பெரும் வீரம் என்ற வள்ளுவப் பெருந்தகையின் வாக்கினை சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் 'உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்தலும்' எனக் கூறுகின்றார்.

சங்ககாலத்திலே கன்னிப்பெண்கள் மட்டுமே காலிலே சிலம்பு அணிவது வழக்கம்.ஆனால் சற்று பின்வந்த சிலப்பதிகார காலத்திலே திருமணமான பெண்கள் சிலம்பணிந்தார்கள். அச்சிலம்பிலே ஒரு சிலம்பு கழன்றாலோ உடைந்தாலோ கழற்றினாலோ அங்கு விபரீதம் நிகழும் என்பது நம்பிக்கை.

அவ்வகையிலே கண்ணகையினதும் கோப்பெருந்தேவியினதும் கழற்றிய ஒற்றைச்சிலம்புகள் சிலப்பதிகாரமாயின என்று கூறலாம்.

கண்ணகி தமிழரிடையே ஒரு புதுத்தெய்வமாக உருப்பெற்ற கதையை சிலப்பதிகாரம் சுவைபடக்கூறுகிறது.

'வானோர் வடிவில் வந்த கோவலனோடு தெய்வ விமானமேறி கண்ணகி வானகம் சென்ற காட்சியைக் கண்ட வேடுவர்கள் அவளைத் தெய்வமாகப் போற்றினார்கள்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறு குடியீரே சிறு குடியீரே ....என்ற சிலப்பதிகார குன்றக்குரவைப் பாடலைப் பாடி வேங்கை மரத்தின் கீழ் எடுத்த முதற் சடங்கு கண்ணகி சடங்காகும். அதனையொட்டி கண்ணகி சடங்கு முறை வழக்கிற்கு வந்தது.

சேரன்செங்குட்டுவன் இமயத்திலிருந்து கல்லெடுத்து வந்து கங்கையில் நீராட்டி அக்கல்லிலிருந்து கண்ணகியின் சிலை வடித்து தனது தலைநகராம் வஞ்சிமாநகரில் அமைத்த ஆலயத்தில் பிரதிஷ்டை செய்தான்.

அங்கு இந்திரவிழா எடுத்தான்.இந்த விழாவிற்கு குடகக்கொங்கரும், மாளுவவேந்தனும், கடல்சூழிலங்கை கயபாகு வேந்தனும் வந்திருந்ததாக சிலப்பதிகாரம் கூறி நிற்கிறது.

இச்சிலப்பதிகாரத்தையும் பழைய ஏடுகளையும் வைத்து கிழக்கில் பல காப்பியங்களும் நூல்களும் வெளிவந்தன.கண்ணகிதேவியைப் பத்தினித்தெய்வமாக முதன்முதல் ஈழநாட்டிற்கு அறிமுகஞ்செய்து வைக்கின்றது சிலப்பதிகாரம்.

வழக்குரைநூலோ கண்ணகி தேவியை சோழநாட்டின் பெருந்திருமகளாக காவிரிப்பூம்பட்டணத்து நங்கையர் திலகமாக ஈழநாட்டிற்கு முதன்முதல் அறிமுகஞ் செய்து வைக்கின்றது.

கயபாகு காலத்தில் அதாவது கி.பி.2ம் நூற்றாண்டில் கண்ணகி வழிபாடு இலங்கைக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. ஆனால் இப்போதுள்ள கண்ணகை அம்மன் ஆலயங்கள் மீது பாடப்பெற்ற காவியங்கள் 15ம் நூற்றாண்டின் பின் தோன்றியவையாகும்.

கிழக்கில் கண்ணகி இலக்கியங்களாக வசந்தன் கவித்திரட்டு.குளுத்திப் பாடல், உடுகுச் சிந்து, ஊர்சுற்றுக் காவியம், மழைக்காவியம்,கூவாய் குயில்,கண்ணகை அம்மன் ஊஞ்சல், கண்ணகி அம்மன் குழுத்திப் பாடல்கள் ஆகியவற்றை தி.சதாசிவஐயரும் பண்டிதர் வீ.சீ.கந்தையாவும் வெளியிட்டுள்ளனர்.

பேராசிரியர் க.கணபதிப்பிள்ளை கண்ணகி வழக்குரைப் பாடல்களை பத்திரிகைகளில் நிறையவே எழுதியுள்ளார்.வித்துவான் எவ்.எக்ஸ்.சி.நடராசா கண்ணகி வழக்குரை நூலின் முதற் பகுதியினை 1965 இல் வெளியிட்டிருந்தார்.

அதன்பின்பு வித்துவான் பண்டிதர் வீ.சீ.கந்தையா 'கண்ணகி வழக்குரை' எனும் முழு அளவிலான நூலை1968 இல் எழுதியுள்ளார்.காரைதீவு இந்து சமய விருத்திச் சங்கம் இதனை வெளியிட்டு வைத்தது.

கண்ணகி வழிபாட்டின் தோற்றம் பற்றி தமிழ் இலக்கிய நூல்கள் மட்டுமல்ல சிங்கள இலக்கிய நூல்களும் காணப்படுகின்றன. ராஜாவலிய, ராஜரத்தினாகார, பத்தினிக்கத்தாவ முதலிய சிங்கள நூல்கள் அவையாகும்.

மாதவி அரங்கேற்றுக் காதையிலே சிலப்பதிகாரம் கூறுகின்ற இசை, நாடக இலக்கணங்களில் மட்டக்களப்பு நாட்டுக்கூத்தின் சாயல் கலந்துரைக்கப்படுகின்றது.

மட்டக்களப்பு வடமோடி நாடகங்களிலே நாடகப் பாத்திரங்கள் கூறுகின்ற தன்மேம்பாட்டுரைகள் பல மாதவியின் பேச்சில் வருவதையும் நாம் காணலாம்.தாளக்கட்டுகள் என்கின்ற நாட்டுக்கூத்து சம்பந்தமான நாட்டியக் கலைச்சொல் வரிசைகளும் மாதவி நடனத்தில் இடம்பெற்று வருதலையும் குறிப்பிடலாம்.

முத்தமிழ் வித்தகர் விபுலானந்த அடிகள் முத்தமிழ் நூலான சிலப்பதிகாரத்தின் தமிழிசை மரபுகளை கோர்த்து தொகுத்து இசைக்களஞ்சியமாம் 'யாழ்நூலை' யாத்தருளினார்.

நாடுகாட்டுப் பரவணிக் கல்வெட்டில் கண்ணகி வணக்கம் பற்றி முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது.கண்ணகி வணக்கம் இலங்கையின் இரண்டு இனத்தாரிடையே (தமிழர், சிங்களவர்)வளர்க்கப்பட்டு வந்தது.

கண்ணகை அம்மன் என்றும் 'பத்தினி தெய்யோ' என்றும் வழங்கப்பட்டு வந்தது. சிலம்புக்காதை பற்றிய பாடல்களை மட்டக்களப்பிலே கண்ணகி வழக்குரை என்றும் திருமலையிலே கோவலன் காதை என்றும் வவுனியாவிலே சிலம்பு கூறல் என்றும் பாடுவர்.

கயபாகு மன்னன் காலத்தில் கண்ணகி வழிபாடு இலங்கைக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. இன்று கிழக்கில் 60க்கு மேற்பட்ட கண்ணகை அம்மன் ஆலயங்கள் இருக்கின்றன.

கயவாகு வேந்தனும் இலங்கையில் முதலில் எங்கு கண்ணகிக்கு கோயில் எடுப்பித்தான் என்பதில் ஐயமிருக்கிறது.

அனுராதபுரத்தில் அல்லது யாழ்.கந்தரோடைக்கு அருகிலுள்ள அங்கணாமைக்கடவையில் கட்டப்பட்டது என்று ஆ.முத்துத்தம்பிப்பிள்ளை குறிப்பிடுகிறார்.

மதுரையை எரித்த கண்ணகி சினத்துடன் தென்பகுதியூடாக இலங்கை வந்து வன்னியின் முல்லைத்தீவிலுள்ள வற்றாப்பளை எனுமிடத்தில் குளிர்ந்து சீற்றம் தணிந்ததாக வரலாறு கூறுகிறது.

தனிப்பட்டவர்கள் கண்ணகை ஆலயங்களை சிறிய அளவில் கட்டி வழிபட்டு வந்தனர்.இதனை மட்டக்களப்பு பூர்வ சரித்திரம் என்ற நூலும் சுட்டிநிற்கிறது.

கண்டி அரசன் இரண்டாம் இராசசிங்கன் காலத்தில் (1629-_1637) பாடப்பெற்ற தம்பிலுவில் கண்ணகை அம்மன் ஊர்சுற்றுக் காவியத்தில் மட்டக்களப்புப் பிராந்தியத்தில் 30 கண்ணகை அம்மன் ஆலயங்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.

வி.ரி.சகாதேவராஜா