வாள் வைத்திருந்தாக குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட இருவரின் விபரங்களை தெரியப்படுத்தாத காரணத்தினால் யாழ்.பொலிஸ் நிலைய தலைமைப் பொலிஸ் பொறுப்பதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (30) ஞாயிற்றுக்கிழமை கொக்குவில் பகுதியைச் சேர்ந்த பாடசாலை மாணவர் ஒருவரும், ஆசிரியர் ஒருவரும் உடமையில் வாள் வைத்திருந்தாக குற்றஞ்சாட்ப்ப்ட்டு யாழ். பொலிஸரினால் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட இருவர் குறித்தும் வடமாகாண பிரதிப்பொலிஸ் மாஅதிபருக்கு தகவல் வழங்கவில்லை என குற்றஞ்சாட்டப்பட்ட யாழ்.தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இன்று (31) முல்லைத்தீவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
குறித்த இருவரில் ஒருவர் கடந்த ஓகஸ்ட் மாதம் இடம்பெற்ற உயர்தர பரீட்சைக்கு முகம் கொடுத்தவர் என்பதோடு, அவர் அண்மையில் இடம்பெற்ற உயர்தர நடனம் மற்றும் நாடக பிரயோக பரீட்சைக்கும் தோற்றியுள்ளதோடு, குறித்த நாடகத்திற்காக வாளை பயன்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பரீட்சையை நிறைவு செய்த நிலையில், வாளின் உரிமையாளரிடம் வாளை ஒப்படைப்பதற்காக தனது நடன ஆசிரியருடன் சென்றுகொண்டிருக்கும்போதே, ஆவா குழுவைச் சேர்ந்தவர்கள் எனும் சந்தேகத்தில் இவர்கள் இருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த இருவரும், ஆவா குழுவினர் என ஆரம்பத்தில் சந்தேகம் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், கைதுசெய்யப்பட்ட பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியரை ஆயுதங்களை தம் வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் யாழ். நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கையினை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.