யாழ்ப்பாண மேல்நீதிமன்ற நீதிபதியைக் கொலை செய்யும் திட்டத்துடனேயே அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது என்று வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார்.
ஜீ.சீ.ஈ. சாதாரண தரப் பரீட்சையில் கடந்த வருடம் யாழ்ப்பாண மாவட்டத்தில் 9ஏ பெறுபேறு பெற்ற மாணவர்களக் கௌரவிக்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று இடம்பெற்றது. யாழ்ப்பாணப் பிராந்திய இராணுவத்தினர் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர். அதில் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றுகையில் ரெஜினோல்ட் குரே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,
நல்லூரில் கடந்த 22 ஆம் திகதி நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் நீதிபதி இழஞ்செழியனே இலக்கு வைக்கப்பட்டிருக்கிறார். அவரது மெய்ப்பாதுகாவலரான சிங்கள பொலிஸ் உத்தியோகத்தரே தனது உயிரைக் கொடுத்து நீதிபதியை காப்பாற்றியுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த தனது மெய்ப்பாதுகாவலரான பொலிஸ் உத்தியோகத்தரின் குடும்பத்தினரைக் கண்டதும் அவர்களது கால்களில் விழுந்து அழுதமை மற்றும் மெய்ப் பாதுகாவலரின் பிள்ளைகளைத் தத்தெடுத்தமை எல்லாவற்றையும் தொலைக்காட்சி ஊடாகப் பார்த்தேன். நான் மட்டுமல்ல தென்னிலங்கை மக்கள் அனைவரும் அதனைப் பார்த்து இப்படியும் தமிழ் மனிதர்கள் இருக்கின்றனரா? என்று வியப்படைகின்றனர். இது நல்லிணக்கத்துக்கு அடையாளம்.
யாழ்ப்பாண மேல்நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனின் உயிரைக் காப்பாற்ற சிங்கள பொலிஸ் பாதுகாவலரே தனது உயிரை தியாகம் செய்துள்ளார். இன,மத,மொழி பேதம் இல்லாமல் அந்தச் சமயத்தில் அந்த மெய்ப் பாதுகாவலர் உயிரை தியாகம் செய்துள்ளார். அவருக்கு மட்டுமல்ல தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுமந்திரன், ஈ.சரவணபவன் மற்றும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட பலருக்கும் சிங்கள பொலிஸாரே பாதுகாப்பு வழங்குகின்றனர். அவர்களுடைய உயிர்களைத் தமிழ் பொலிஸார் காப்பாற்றவில்லை.
கல்விஇந்த உலகத்தில் தங்கத்தை விடப் பெறுமதியானது கல்வி. தங்கத்தைத் திருடினாலும் கல்வியை யாராலும் திருட முடியாது. ஆகவே அனைவரும் பிள்ளைகளுக்குச் சிறந்த கல்வியைப் புகட்டுங்கள்.
நாட்டின் விடுதலைக்காகப் போராடுவதுதான் இராணுவத்தினரின் கடமை. எமது நாட்டில் போர்க் காலத்தில் இராணுவத்தினரின் உயிர்களும் இரத்தமும் இந்த மண்ணுக்காக அர்ப்பணிக்கப்பட்டிருந்தது. உள்நாட்டுப் போர் முடிந்து விட்டதால் அவர்களுக்கு ஒரு வேலையும் இல்லை.அதற்காக அவர்களைச் சும்மா இருக்க விடக்கூடாது. இந்த நாட்டின் சக்திக்கு
உதவியாக இருக்க வேண்டும் என்றுதான் இவ்வாறான பணிகளைச் செய்கின்றனர்.
இந்த நாட்டில் உள்ள பிள்ளைகள் நன்கு படித்து இங்கேயே சேவை செய்ய வேண்டும். இந்த நாட்டில் பல முக்கிய பதவிகளில் ஏராளமான தமிழ் அதிகாரிகள் கடமையாற்றுகின்றனர். ஆகவே உங்கள் கல்வி எமது நாட்டுக்கே திரும்பப் பயன்படவேண்டும்- என்றார்.
இந்த நிகழ்வில் இலங்கை இராணுவத்தளபதி மகேஷ் சேனநாயக்க, வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் இளங்கோவன், யாழ்ப்பாண மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி, பாடசாலை அதிபர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.