Sunday, July 30, 2017

How Lanka

பெரல்களில் நீரை நிரப்பி காடுகளினுள் வைப்பதற்கு நடவடிக்கை


வற்றிப் போயுள்ள குளங்களை அண்மித்த பிரதேசங்களை நோக்கி நீரைத் தேடிச் சுற்றித்திரியும் காட்டு மிருகங்களுக்காக பெரல்களில் நீரை நிரப்பி  அவற்றை காடுகளினுள் வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 
நவகத்தேகம பிரதேச செயலகம் மற்றும் “ஆனமடு நாம்” (ஆனமடு அபி) என்ற அமைப்பும் இணைந்து  ஏற்பாடு செய்த இந்நிகழ்வு நேற்று (29) முழு நாளும் முன்னெடுக்கப்பட்டது.  

புத்தளம் மாவட்டத்தில் நிலவும் கடும் வரட்சியினால் தற்போது நவகத்தேகம பிரதேச செயலகப் பிரிவினுள் காட்டு மிருகங்கள் நீரை அருந்தி வந்த 34 குளங்கள் முழுமையாக வற்றிப் போயுள்ளதால்  காட்டு மிருகங்களான யானைகள், மான்கள், முயல்கள், மறைகள் உள்ளிட்ட பல மிருகங்கள் கடுமைாயகப் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.
 
கடந்த தினங்களில் நீரைத் தேடி தாகத்தோடு அலையும் காட்டு மிருகங்கள் ஊர்களுக்கு நுழைந்த சம்பவங்களும் இடம்பெற்றுள்ளதாக அப்பிரதேச மக்கள் கூறுகின்றனர். 
இதனால்  தாகத்தோடு அலையும் காட்டு மிருகங்களுக்காக பெரல்களை இரண்டாக வெட்டி அவற்றை குளங்களை அண்மித்த இடங்களில் புதைத்து அவற்றினுள் பவுசர்கள் மூலமாக நீர் கொண்டு வரப்பட்டு நீரை நிரப்புவதற்கான ஆலோசனையினை முன்வைத்த நவகத்தேகம பிரதேச செயலாளர் பீ. ஜீ. பொடினேரிஸ், அதற்கான அனுசரணையினை வழங்குமாறு  பல நிறுவனங்களின் ஒத்துழைப்பை கோரியிருந்த நிலையில்  அதற்கு அனுசரணையினை வழங்குவதற்கு “ஆனமடு நாம்” என்ற அமைப்பு இணக்கம் தெரிவித்துள்ளது.
 

இவ்வாறு பெறப்பட்ட பெரல்கள் இரண்டாக வெட்டப்பட்டு காட்டு மிருகங்கள் அதிகம் சுற்றும் குளங்களை அண்மித்த  பகுதிகளில் புதைப்பதற்கும், இந்தப் பணியில் மக்களை ஈடுபடுத்திக் கொள்வதற்கு கிராம அதிகாரிகள் மூலம் பிரதேச செயலாளர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.