Friday, July 21, 2017

How Lanka

கொக்கேன் போதைப் பொருளுடன் தொடர்பு இல்லை - லங்கா சதொச நிறுவன தலைவர்


பிரேசிலிலிருந்து நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ள கொக்கேன் போதைப் பொருளுடன் லங்கா சதொச நிறுவனத்துக்கும் அதன் ஊழியர்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லையென அதன் தலைவர் டி.எம்.கே.பி தென்னகோன் நேற்று உறுதியாக தெரிவித்தார்.

லங்கா சதொச ஊழியர்களின் சாதுரியம் காரணமாகவே இப்போதைப் பொருள் விநியோகம் தடுத்து நிறுத்தப்பட்டிருப்பதாக  சுட்டிக்காட்டிய அதன் தலைவர், குறிப்பிட்ட சீனியை விநியோகம் செய்த நிறுவனம் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புபட்டிருப்பது பொலிஸ் விசாரணைகள் மூலம் உறுதி செய்யப்படுமிடத்து அந்நிறுவனத்தை தடைசெய்வோம் என்றும் கூறினார்.

கொழும்பிலுள்ள சதொச தலைமையகத்தின் கேட்போர்கூடத்தில் நேற்றுக் காலை நடத்தப்பட்ட விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே லங்கா சதொச தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.

லங்கா சதொச, கொக்கெயினை விநியோகிப்பதற்காக கொண்டு செல்லும்போதே பொலிஸார் அதனை கைப்பற்றியதாக சில ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தி முற்றிலும் தவறானதென்றும் தலைவர் தென்னகோன் மறுப்புத் தெரிவித்தார்.

லங்கா சதொச நிறுவனத்துக்காக தனியார் நிறுவனமொன்றினால் வழங்கப்பட்ட சீனியை இரத்மலானையிலுள்ள களஞ்சியசாலையில் கொள்கலனிலிருந்து லொறியொன்றுக்கு மாற்றம் செய்யும்போதே சீனியுடன் கொக்கெயின் பக்கற்றுக்கள் இருப்பது லங்கா சதொச ஊழியர்களால் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அதன் பின்னரே அவை இரத்மலானை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதாகவும் தலைவர் ஊர்ஜிதம் செய்தார்.

அத்துடன் மேற்படி நிறுவனம் லங்கா சதொசவுக்கு விநியோகம் மேற்கொண்டது இது முதற்தடவையல்ல என்றும் இதற்கு முன்னரும் அவை விநியோகத்தை முன்னெடுத்துள்ளன என்றும் அதன் தலைவர் கூறினார். இச்சம்பவம் தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது-

சீனி கொள்வனவுக்காக நாம் கேள்விமனு ​கோரியிருந்தோம். இதன்போது 05 நிறுவனங்கள் விண்ணப்பித்திருந்தன.

அதில் மிகக் குறைந்த விலைக்கு சீனி விற்பனை செய்வதற்கு இணங்கியிருந்த குறிப்பிட்ட நிறுவனத்திடமிருந்து 500 மெட்ரிக் தொன் சீனியை கொள்வனவு செய்ய நாம் இணங்கியிருந்தோம்.

துறைமுகத்தில் சுங்க அதிகாரிகளின் சோதனைக்குப் பின்னர், சீனி ஏற்றி வந்த கொள்கலன் இரத்மலானையிலுள்ள பொருளாதார மத்திய நிலையத்தின் லங்கா சதொசவுக்கு சொந்தமான களஞ்சியசாலையை வந்தடைந்தது.இக்கொள்கலன் முறைப்படி சீல் வைத்துக் காணப்பட்டது. இச்சீனியை குருநாகலைக்கு விநியோகம் செய்ய வேண்டியிருந்ததனால் களஞ்சிய முகாமையாளர், லங்கா சதொச ஊழியர், சீனி விநியோக நிறுவனத்தின் ஊழியர் மற்றும் லொஜிஸ்டிக் நிறுவன ஊழியர் ஆகியோர் முன்னிலையில் கொள்கலனின் சீல் முறைப்படி திறக்கப்பட்டது.

அதனையடுத்து கொள்கலனிலிருந்த சீனி பக்கற்றுக்கள் லொறியொன்றுக்கு மாற்றம் செய்யப்பட்டன.

அப்போதே லங்கா சதொசவுக்கு சொந்தமான ஊழியர்கள் சீனி பக்கற்றுக்களுடன் கலந்திருந்த சில பக்கற்றுக்கள் உண்மையான சீனியல்ல என்றும் அவை கொக்கெயின் எனும் போதைப் பொருள் என்றும் கண்டுபிடித்தனர். இதனையடுத்து என்னை தொலைபேசியில் தொடர்புகொண்டபோது நான் அந்த கொள்கலனை அப்படியே இரத்மலானை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்குமாறு அவர்களுக்குத் தெரிவித்தேன்.

இச்சம்பவம் நேற்று முன்தினம்(19) மாலை 5 மணியளவில் இடம்பெற்றது.

சீனியுடன் கலந்து விற்பனைக்கு வந்த கொக்கெயின் போதைப் பொருளை கண்டுபிடித்தமைக்காக எமது ஊழியர்களை கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிசாட் பதியுதீன் பாராட்டியுள்ளார். அத்துடன் அவர்களது சேவையை பாராட்டி நான் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் கடிதங்களை எழுதியுள்ளேன்.