மும்பையின் எல்ஃபின்ஸ்டோன் சாலை ரயில் நிலைய நடைபாதை மேம்பாலத்தில் ஏற்பட்ட சன நெரிசலில் சிக்கி 22 பேர் உயிரிழந்துள்ளதுடன் 55 பேர் காயமடைந்துள்ளனர்.
மும்பையில் கன மழை பெய்து வரும் நிலையில், இன்று (29) காலை 10.40 மணியளவில் எல்ஃபின்ஸ்டோன் சாலை ரயில் நடைபாதை மேம்பாலத்தில் கடும் கூட்ட நெரிசல் இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மின் கசிவு ஏற்பட்டுள்ளதாக சிலர் வதந்தி பரப்பியதால், மக்கள் அலறியடித்துக்கொண்டு ஓடத் தொடங்கியுள்ளனர். இதன் போது நடைபாதை மேம்பாலத்தின் ஒரு பகுதி தகரக்கூரை இடிந்து வீழ்ந்துள்ளது.
இதனால் மக்களிடையே பீதியும் பரபரப்பும் ஏற்பட்டு முண்டியடித்துக்கொண்டு வெளியேற முயன்றதில், கடும் நெரிசல் ஏற்பட்டு பலர் மூச்சுத்திணறலுக்குள்ளாகி உயிரிழந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதனிடையே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் விபத்து தொடர்பாக ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார்.
இதேவேளை, ரயில் நிலையத்திற்கு ஒரே நேரத்தில் 4 ரயில்கள் வந்ததால் நெரிசல் ஏற்பட்டதாக ரயில்வே அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
நடைபாதை மேம்பாலத்தின் அகலம் உடனடியாக விஸ்தரிக்கப்படும் என ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார்.