Thursday, November 30, 2017

How Lanka

நாட்டில் சீரற்ற வானிலை - பாடசாலைகளுக்கு விடுமுறை, மீனவர்களைக் காணவில்லை


நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக சில மாகாணங்களிலுள்ள பாடசாலைகள் அனைத்திற்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் மேல், மத்திய, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

நேற்றிரவு வரை பெற்றுக்கொள்ளப்பட்ட தரவுகளுக்கு அமைய விடுமுறை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் குறிப்பிட்டார்.

இடர் முகாமைத்துவ நிலையத்துடன் கலந்துரையாடி இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார்.


மேலும், இந்த பாடசாலைகளில் இன்று நடத்தப்படவிருந்த தவணைப்பரீட்சை மற்றுமொரு நாளில் நடத்தப்படும் எனவும் கல்வி அமைச்சர் தெரிவித்தார்.

இதேவேளை, சில பாடசாலைகளில் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதாகவும் கட்டிடங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவங்கள் தொடர்பில் மதீப்பீட்டு பணிகள் இன்று முன்னெடுக்கப்படும் எனவும் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, நேற்றிரவு கடலுக்கு சென்ற 07 படகுகள் காணாமற்போயுள்ளன.

குறித்த படகுகளில் 12 மீனவர்கள் சென்றுள்ளதாக கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடற்படையினரின் உதவியுடன் காணாமற்போயுள்ள படகுகளைத் தேடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளிலுள்ள பிரதான வீதிகளில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.

வீதிகளில் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளமையாலும், வெள்ள நீர் நிரம்பியுள்ளதாலும் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்தது.

இதேவேளை, நாட்டின் பல பகுதிகளில் மின்சாரத் துண்டிப்பும் ஏற்பட்டுள்ளது.

நேற்றிரவு வீசிய பலத்த காற்றுடன் கூடிய வானிலையை அடுத்து இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை குறிப்பிட்டது

மேலும், பல பகுதிகளில் ரயில் போக்குவரத்தும் ஸ்தம்பிதமடைந்துள்ளது.

இதேவேளை, மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் மூன்று வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

இதன் காரணமாக நீர்த்தேக்கத்தை அண்மித்த பகுதியில் வாழும் மக்களை அவதானமாக செயற்படுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

பலத்த மழை காரணமாக பல பகுதிகளிலுள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக நியூஸ்பெஸ்ட் செய்தியாளர்கள் குறிப்பிட்டனர்.

பலத்த மழை காரணமாக மூன்று மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

களுத்துறை, மாத்தளை மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மண் சரிவிற்கான அறிகுறிகள் தென்படுமாயின் குறித்த பகுதிகளிலிருந்து உடனடியாக வெளியேறுமாறு இடர் முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி குறிப்பிட்டார்.