Thursday, November 30, 2017

How Lanka

வட கொரியா அமெரிக்காவுடன் போரைத் தூண்டினால் முற்றிலுமாக அழிந்து விடும்

வட கொரியா போரைத் தூண்டும் விதமாக நடந்து கொள்கிறது என்றும் அமெரிக்காவுடன் மோதினால் முற்றிலுமாக அழிந்து விடும் என்றும் ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹேலி கூறினார்.

கண்டம் விட்டு கண்டம் பாயக் கூடிய, சக்தி வாய்ந்த புதிய ஏவுகணையை வட கொரியா செவ்வாய்க்கிழமை விண்ணில் பறக்கச் செய்து சோதனை மேற்கொண்டது.

அந்த சோதனையின்போது விண்ணில் ஆயிரம் கிலோ மீட்டர் பறந்த ஏவுகணை ஜப்பான் கடலில் விழுந்தது.

இந்த சோதனை மூலம் அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டன் மற்றும் நியூயார்க் நகரைக் குறி வைத்து தாக்கும் திறனைப் பெற்றதாக வட கொரியா கூறியது.

புதிய ரக ஏவுகணையில் அணு ஆயுதம் பொருத்தி தாக்குதல் நிகழ்த்த முடியும் என்றும் தெரிவித்தது.

மேலும், இந்த சோதனைகளையடுத்து, வட கொரியாவை அணு ஆயுத நாடாக கருத வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

வட கொரியாவின் இந்தச் செயல் சர்வதேச பதற்ற நிலையைப் புதிய உச்சத்துக்கு எடுத்துச் சென்றிருக்கிறது.

இந்த நிலையில், வட கொரியா விவகாரம் குறித்து விவாதிப்பதற்காக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அவசரக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹேலி பேசியது:

வட கொரியாவின் புதிய ஏவுகணை சோதனையானது உலகை யுத்தத்தின் விளிம்புக்கு கொண்டு வந்துள்ளது. அந்நாட்டின் செயல் போருக்கான அறைகூவலாக உள்ளது.

போரைத் தூண்டுவதற்காகவே இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. போர் மூண்டால் இதுபோன்ற சோதனைகள்தான் அதற்குக் காரணமாக இருக்கும்.

வட கொரியாவுடன் அமெரிக்கா போரிட விரும்பியதில்லை. இப்போதும் விரும்பவில்லை. ஆனால் இந்த ஏவுகணை சோதனைகளைத் தொடர்ந்து அமெரிக்காவுடன் மோதினால் வட கொரியா முற்றிலுமாக அழிந்துவிடும்.

வட கொரியாவுடன் உலக நாடுகள் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்று அமெரிக்கா வலியுறுத்துகிறது.

ஐ.நா. ஏற்கெனவே விதித்துள்ள பொருளாதாரத் தடைகளை முற்றிலுமாக செயல்படுத்த வேண்டும். அந்த நாட்டுடனான இராணுவ, வர்த்தக, தொழில்நுட்ப ஒத்துழைப்பை அனைத்து நாடுகளும் கைவிட வேண்டும்.

அந்த நாட்டிலிருந்து எந்தப் பொருளையும் இறக்குமதி செய்யவோ, அந்த நாட்டுக்கு எந்தப் பொருளையும் ஏற்றுமதி செய்யவோ கூடாது.

வெளிநாடுகளில் உள்ள அனைத்து வட கொரிய பணியாளர்களையும், விஞ்ஞானிகள் அனைவரையும் வெளியேற்றி, அவர்கள் நாட்டுக்கே திருப்பி அனுப்ப வேண்டும்.

ஐ.நா. இதற்கு முன்னர் பல கட்டங்களாகப் பொருளாதாரத் தடைகளை விதித்த போதிலும், மேலும் மேலும் சக்தி வாய்ந்த புதிய ஏவுகணைகளை வட கொரியா சோதித்து வருகிறது.

அடுத்ததாக, அணு ஆயுதங்களைக் குவிக்கத் திட்டமிட்டு வருகிறது. இதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று நிக்கி ஹேலி பேசினார்.