Sunday, November 19, 2017

How Lanka

வாள்வெட்டு சம்பவங்களின் பின்னனியும் தொடர் விசாரணைகளில் வெளிவந்த உண்மைககளும்


யாழ்ப்பாணத்தில் அண்மையில் அடுத்தடுத்து நடந்த வாள்வெட்டுச் சம்பவங்கள் முழு நாட்டையும் உலுக்கியது என்றே கூறவேண்டும்.

பட்டப்பகலிலும், இரவு வேலைகளிலும் துணிகரமான முறையில் வாள் வெட்டுக்களும், குழு மோதல்களும், திருட்டுச் சம்பவங்களும் அரங்கேறியுள்ளன.

இந்நிலையில் யாழில் வாள்வெட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு வரும் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் வடமாகாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு உத்தரவு பிறப்பித்திருந்தார்.

அதன்படி யாழ். நகரம் மற்றும் அதனை அண்டிய பகுதிகள், கொக்குவில், கோண்டாவில், உரும்பிராய் உள்ளிட்ட பகுதிகளில் இரவு வேளைகளில் பெருமளவான பொலிஸார் வழமைக்கு மாறாக பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.

இந்த நிலையில் குறித்த வாள்வெட்டுச் சம்பவங்கள் தொடர்பில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதில், யாழில் இயங்கும் ஆவா குழுவுக்கும், தனு ரொக்ஸ் என்ற குழுவுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவங்களே கடந்த தினங்களில் யாழில் நடைபெற்ற வாள் வெட்டு சம்பவங்கள் என பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளில் கண்டறியப்பட்டு உள்ளது.

ஆவா குழுவை சேர்ந்த சன்னா என்று அழைக்கப்படும் பிரசன்னா, தேவா, மற்றும் பிரகாஸ் ஆகியோர் இருந்த நிலையில், தேவா மற்றும் பிரகாஸ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இதனால் சன்னா என்று அழைக்கப்படும் பிரசன்னா தலைமறைவாகி இருந்தார்.

இந்த நிலையில் ஆவா குழுவின் அட்டகாசங்கள் அடங்கியிருந்த நிலையில், ஆவா குழுவில் கீழ் மட்டத்தில் இருந்தவர்கள் தம்மை தலைமைகளாக மாற்ற முயற்சித்துள்ளனர்.

இதன் விளைவாக ஆவா குழு இரு பிரிவுகளாக பிளவு பட்டு “நிஷா விக்டர்” தலைமையில் ஒரு குழுவும், “தனு” தலைமையில் ஒரு குழுவும் என ஆவா குழு பிளவு பட்டது.

நிஷா விக்டர் தனது தலைமையிலான குழுவுக்கு “Lycan” எனவும், தனு தனது தலைமையிலான குழுவுக்கு “Rox” எனவும் பெயர் சூட்டிக்கொண்டனர்.

இந்த இரு குழுவினருக்கும் இடையில் ஏற்பட்ட மோதல்களே அண்மையில் யாழ்ப்பாணத்தில் தலைவிரித்தாடிய வாள்வெட்டு சம்பவங்கள்.

சமூக வலைத்தளங்களில் மோதிக்கொள்ளும் இரு குழுவினரும், கடந்த ஜூலை மாதம் 30ஆம் திகதி “நிஷா விக்டர்” தலைமையிலான குழுவினர் மானிப்பாயில் உள்ள “தனு”வின் இருப்பிடத்தை தேடி சென்று தாக்குதலை மேற்கொண்டு உள்ளனர்.

அன்றைய தினம்தான் கோப்பாய் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த இருவர் மீது “நிஷா விக்டர்” தலைமையிலான குழுவினர் தாக்குதல் நடத்தினார்கள்.

இதையடுத்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் “நிஷா விக்டரை” கைது செய்த நிலையில், மனோஜ், வினோத், சுரேந்திரன், பிரசன்னா, மற்றும் போல் ஆகிய ஐந்து சந்தேகநபர்கள் யாழ்ப்பாணத்தில் வைத்து கைது செய்யபப்ட்டனர்.

இவர்களின் கைதுகளை தொடர்ந்து யாழில் வாள் வெட்டு சம்பவங்கள் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இந்த நிலையில் கடந்த 11ஆம் திகதி முதல் மீண்டும் மோதல்கள் ஆரம்பமாகியுள்ளன. அதன் போது தனு ரொக்ஸ் குழுவை இலக்கு வைத்து தாக்குதல் சம்பவங்கள் மேற்கொள்ளப்பட்டன.

அதுமட்டுமின்றி கடந்த 16ஆம் திகதி வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில் விளக்கமறியலில் வைக்கப்பட்டு இருந்த 15 சந்தேகநபர்களுக்கு பிணை வழங்கப்பட்டது.

அவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டவர்களில் நிஷா விக்டரும் ஒருவர். இவர் பிணையில் செல்லாத காரணத்தினால் மல்லாகம் நீதிமன்றுக்கு அழைத்துச் செல்லும் வழியில் தப்பிச் சென்று ஒரு சில மணி நேரங்களில் கைது செய்யப்பட்டிருந்தார்.

இதேவேளை, என்றும் இல்லாதவகையில் யாழ்ப்பாணத்தில் பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் யாழில் ஒரு வித பதட்டமான சூழல் உருவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.