Saturday, December 23, 2017

How Lanka

விக்னேஸ்வரன் அரசியல்வாதியாகத் தோற்றுவிட்டார் - டிலான் பெரேரா

வடக்கு முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் ஓர் அரசியல்வாதியாக தோற்றுவிட்டார் என்று கூறுபவர்கள் முதலமைச்சரின் மக்கள் செல்வாக்கிற்கு அஞ்சியே அவ்வாறு விமர்சித்து வருகின்றதாக வட மாகாணசபை உறுப்பினர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

சுதந்திரக்கட்சியின் பேச்சாளரும், இராஜாங்க அமைச்சருமான டிலான் பெரேரா, முதலமைச்சர் விக்னேஸ்வரன் சிறந்த நீதியரசராக இருந்த போதும் அரசியல்வாதியாகத் தோற்றுவிட்டார் என்று அண்மையில் தெரிவித்திருந்தார்.

இந்த கருத்துக்குப் பதிலளிக்கும்விதமாக, பொ.ஐங்கரநேசன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அதில் மேலும்,

வடக்கு முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் ஓர் அரசியல்வாதியாகத் தோல்வியடைந்துவிட்டார் எனவும், மத்திய அரசு வழங்கும் நிதியையே சரியாகப் பயன்படுத்தத் தெரியாத முதலமைச்சர் மலேசியா வழங்கும் நிதியை என்ன செய்வார் என்று புரியவில்லையெனவும் கேலியும், கிண்டலும் தொனிக்கச் சுதந்திரக்கட்சியின் பேச்சாளரும், இராஜாங்க அமைச்சருமான டிலான் பெரரா பேசியிருக்கின்றார்.


அவர் மட்டுமல்ல, சிங்களத் தரப்பு அரசியல்வாதிகள் பலரும் தமிழ் அரசியல்வாதிகள் சிலரும் முதலமைச்சர் விக்னேஸ்வரனையும், வட மாகாணசபையையும் விமர்சிக்கும் போக்கு அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது.

முதலமைச்சரின் மக்கள் செல்வாக்குக்கு அஞ்சும் அரசியல்வாதிகளே, மக்கள் மனங்களில் இருந்து அவரைக் கீழிறக்கும் உள்நோக்கில் இவ்வாறு தவறாக விமர்சித்து வருகின்றனர்.

விக்னேஸ்வரன் நீண்டகாலமாகத் தென்னிலங்கையில் வாழ்ந்தவர் என்பதாலும், சிங்களத்தரப்புடன் நெருங்கிய உறவுகளைக் கொண்டிருந்தமையாலும் அவரைத் தமது விருப்புகளுக்கு ஏற்ப கையாளலாம் என்பதே சிங்கள தலைமைகளினதும் அவரை முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறக்கியவர்களினதும் எண்ணவோட்டமாக இருந்தது.

ஆனால், இவர்களது எதிர்பார்ப்புகளுக்கு முற்றிலும் மாறாக முதலமைச்சரின் செயற்பாடுகள் அமைந்தன. தமிழ் மக்களின் அரசியலையும், போரில் அவர்கள் பட்ட ஆற்றொணாத் துயரங்களையும் நேரில் கண்டுணர்ந்த முதலமைச்சர், அவற்றுக்கான நிரந்தர தீர்வு வேண்டி உள்நாட்டிலும், சர்வதேச அரங்கிலும் குரல் எழுப்ப ஆரம்பித்தார்.

தங்களின் குரலாவே முதலமைச்சர் இருப்பதை உணர்ந்த மக்களிடையே அவர் மீதான பற்றும், செல்வாக்கும் உயர்ந்தது.

முதலமைச்சருக்கு ஏற்பட்டு வருகின்ற செல்வாக்கு, எங்கே மீண்டும் தமிழ்த் தேசியம் பலம்பெற்றுவிடுமோ என்ற அச்சத்தைப் பேரினவாதச் சிங்கள அரசியல் தலைமைகளிடையேயும், எங்கே தங்களுடைய இருப்பு பறிபோய்விடுமோ என்ற அச்சத்தைச் சில தமிழ் அரசியல்வாதிகளிடையேயும் ஏற்படுத்தியுள்ளது.

முதலமைச்சரின் மக்கள் பேராதரவுப் பலத்துக்கு அஞ்சுகின்ற இவர்கள் கூட்டிணைந்து முதலமைச்சர் அவர்களைப் பதவி கவிழ்க்கும் திரைமறைவுச் சதியில் ஈடுபட்டனர்.

அமைச்சர்கள் மீதான உண்மைக்குப் புறம்பான ஊழல் குற்றச்சாட்டுகளும் அவர்களது பதவி விலகல்களும், அதைத் தொடர்ந்து ஆளுநரிடம் முதலமைச்சர் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணைக் கையளிப்பும் இச்சதியின் சில கட்டங்களே.

முதலமைச்சரை பதவி கவிழ்க்க இயலாத நிலையில், இந்தத் தரப்பினரே தற்போது முதலமைச்சர் அரசியலில் தோற்றுவிட்டதாகப் பரப்புரை செய்ய ஆரம்பித்துள்ளனர்.

அதிகாரங்கள் எதுவும் இல்லாத, சுயமாகச் செயற்பட முடியாத மாகாணசபை முறைமையில் உள்ள குறைபாடுகளை முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனின் தனிப்பட்ட குறைபாடுகளாகச் சித்திரித்துக்காட்டி மக்கள் மனங்களிலிருந்து அவரை கவிழ்க்கும் முயற்சியில் மிகத் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இத்தகைய பரப்புரைகளின் பின்னால் உள்ள தமிழ்த் தேசிய எதிர்ப்பு அரசியலைத் தமிழ் மக்கள் நன்றாகவே புரிந்துகொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.