Thursday, January 4, 2018

How Lanka

பிணை முறி மோசடி தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடும் எச்சரிக்கை


தென்னிலங்கை அரசியலை பொருத்தவரையில், மத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழுவினர் வழங்கிய விசாரணை அறிக்கை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள விசேட அறிக்கை தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

குறித்த அறிக்கையின் மூலம், பிரதமர் உள்ளிட்ட, ஐ.தே.க இன் முக்கிய பிரமுகர்களுக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

மத்திய வங்கியின் சர்ச்சைக்குரிய பிணை முறி மோசடியுடன் தொடர்புடைய குற்றவாளிகளை தண்டிக்க தாம் பின்னிற்கப்போவதில்லை என இதன்போது ஜனாதிபதி உறுதியளித்திருந்தார்.

இந்த சந்தர்ப்பத்தில், ஜனாதிபதி தான் கூறியது போல நடுநிலையுடன் செயற்படுவாராயின் தண்டிக்கப்பட போகின்றவர்கள் யார்? அல்லது தண்டனையில் தப்பித்துக்கொள்ள தாமாகவே பதவியில் இருந்து வெளியேறப்போகின்றவர்கள் யார் என்பதை சற்று சிந்தித்துப்பார்க்க வேண்டும்.

பிணை முறி மோசடி தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் நல்லாட்சி அரசின் முதலாவதும், முன்னாள் நிதியமைச்சருமான ரவி கருணாநாயக்க உள்ளிட்ட ஐ.தே.க இன் முக்கிய பிரமுகர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

மேலும், மத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளுக்கு பிரதமர் ரணில் உள்ளிட்ட, முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவும் முன்னிலையாகி தமது சாட்சியங்களையும் அளித்திருந்தனர்.

விசாரணைகளிலிருந்து வெளிப்பட்ட தகவல்களின் அடிப்படையில், மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனை மத்திய வங்கி ஆளுநர் பதவிக்கு நியமிப்பது தொடர்பான பிரதமரின் அதிகாரங்கள் முறையானது என குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும், பிரதமர் ரணில் விக்ரமசிங்க அர்ஜுன் மகேந்திரன் கொடுத்த வாக்குறுதி மீது நம்பிக்கை வைத்து செயற்பட்டிருப்பதாக நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார், எனினும் பிரதமர் அப்படி நடந்திருக்கக் கூடாது என இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த விடயங்கள் கோப் விசாரணைக்குழுவின் முன்னிலையிலும் வெளிப்படுத்தப்பட்டிருந்த போதும் பிரதமரினால், அர்ஜுன் மகேந்திரன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பது குறித்த அறிக்கையின் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க மீது குற்றம் சுமத்தப்பட்டபோது அவர் மீது கூட்டெதிர்க்கட்சியினரால் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்பட்டு, அந்த பிரேரணை நாடாளுமன்றில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் முன்னரே அவராக தான் பதவியில் இருந்து நீக்கப்படுவேன் என சுதாகரித்துக்கொண்டு பதவியை துறந்தார்.

இது முன்னாள் அமைச்சரின் தரப்பில் தான் நிரபராதி என்பதாகவும், தானாக அமைச்சுப்பதவியைத் துறந்தது மக்கள் மத்தியிலும், தென்னிலங்கை அரசியல் சமூகத்தினரிடையிலும் ஒரு கௌரவத்தினையும் ஏற்படுத்தியிருந்தது.

ஏன் எமது தமிழ் தலைமைகள் கூட, குறிப்பாக எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட இன்னும் பல முக்கியஸ்த்தர்களும் முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க பதவி விலகியமை முன்னுதாரணமான செயற்பாடு என விசேட அறிக்கைகளை விடுத்து புகழாரம் சூட்டியிருந்தனர்.

அதேபோன்றதான ஒரு நிலைதான் தற்போது பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் எழுந்துள்ளதாக அறிய முடிகின்றது.

பிணை முறி மோசடி அறிக்கை தொடர்பில் ஜனாதிபதியின் விசேட அறிக்கை வெளியானவுடன், பிரதமர் பதவியில் இருந்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க நீக்கப்படவேண்டும் என்ற கோசங்கள் தற்போது பரவ ஆரம்பித்து விட்டன.

உதாரணமாக இன்றைய தினம் இடம்பெற்ற கூட்டெதிர்க்கட்சியின் ஊடக சந்திப்பிலும்கூட நாடாளுமன்றத்தைக் கலைத்து விட்டு புதிய பிரதமரை தெரிவு செய்யுமாறு ஜனாதிபதிக்கு வலியுறுத்தப்பட்டது.

இதனடிப்படையில் பிரதமர் பதவி விலக வேண்டும் என நெருக்கடிகள் அதிகரிக்கும் பட்சத்தில், தொடர் அழுத்தங்கள் கொடுக்கப்படும் பட்சத்தில் பிரதமர் தாமாக முன்வந்து ரவியைப்போல பதவி விலகுவாரா?? அல்லது பதவி நீக்கப்படுவாரா?? என்ற கேள்விகள் தற்போது தென்னிலங்கை அரசியல் களத்தில் உலா வர ஆரம்பித்து விட்டன.

தன்னை நிரபராதியாக, முன்மாதிரியாகக் காட்டிக்கொள்வதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவி துறப்பாரெனில் அவரது அடுத்த கட்ட நகர்வு என்ன? நல்லாட்சி அரசின் அடுத்த கட்ட நகர்வு என்ன?

அவ்வாறான ஒரு சூழல் ஏற்படும் நிலையில் எமது தமிழ்த் தலைமைகளின் நிலைப்பாடு என்ன? ரவியைப் போல பிரதமரையும் ஆதரிக்கப்போகின்றனரா? அல்லது அவருக்கெதிராக போர்க்கொடிகள் தூக்கப் போகின்றனரா?

பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேற்கத்தேய அரசியல் கொள்கையை பின்பற்றுபவர் ஆதலால், பிரதமர் தானாக பதவி விலகி தன்னை சரியெனக் காட்டிக்கொள்வதோடு, தன் மீது நாட்டுமக்களுக்கும் சரி, அரசியல் தலைமைகளுக்கும் சரி தனிப்பட்ட மரியாதையையும் ஒரு அந்தஸ்த்தினையும் தோற்றுவித்து விடுவார்.

அதனைத் தொடர்ந்து அதே நிலைப்பாட்டில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக மீண்டும் களமிறங்குவார் என்பது தென்னிலங்கை அரசியல் ஆய்வாளர்களின் கருத்து.

மேலும், இலங்கை அரசியல் வரலாற்றில் விசாரணை ஆணைக்குழுவிற்கு நேரே சென்று சாட்சியம் வழங்கிய முதலாவது பிரதமர் என்ற அரசியல் சாதனையையும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஏற்கனவே நிகழ்த்தி விட்டார்.

இந்நிலையில், தற்போது தானாக பதவி விலகும் பட்சத்தில், அடுத்த ஜனாதிபதி தேர்தலில் எவ்வித தடைகளும் இன்றி களத்தில் இறங்கக்கூடிய வாய்ப்புக்களை பிரதமர் தோற்றுவித்து விடுவார் எனவும் அறிய முடிகின்றது.

மேலும், பிரதமர் பதவி விலகினால் அந்த பதவிக்கு தான் சார்ந்த கட்சியிலுள்ள, தனக்கு சாதகாமாக, தனது கட்டுப்பாட்டில் இயங்கக்கூடிய ஒருவரை பிரதமராக நியமிக்கக்கூடும் என தென்னிலங்கை அரசியல் அவதானிகள் குறிப்பிடுவதோடு, அவர் முழுதுமாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் கைப்பாவையாக இயங்குவார் என்பதையும் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்நிலையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க தானாக முன்வந்து பதவியை துறப்பாரெனில், அங்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இடத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கான இடம் கேள்விக்குறியாகும்?

எவ்வித முரண்பாடுகளும் இன்றி பிரதமர் பதவி துறக்கும்போது, மீண்டும் மைத்திரியின் ஆதரவு கரங்கள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கே என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

மறுபக்கம், ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அமைத்திருப்பது காலத்தைக் கடத்தும் செயல் என வசைப்பாடிவந்த கூட்டெதிர்க்கட்சியினர் மத்தியில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது அதிரடி நடவடிக்கையின் மூலம் ஒரு ஹீரோவாக மாறிவிட்டார் என்றே கூறலாம்.

அத்துடன் ஆட்சியில் இருக்கும் ஒரு தலைவர், அதே ஆட்சியில் இருக்கும் மற்றொரு தலைவர் மீது துணிச்சலாக நடவடிக்கை எடுத்தலும், எச்சரிக்கை விடுத்தலும் இலங்கை அரசியல் வரலாற்றில் முதலாவது தருணமாகக் கூட பார்க்கப்படுகின்றது.

இதனை வைத்துப் பார்க்கும்போது, ஜனாதிபதி பிரதமரின் பதவியை நீக்குவாரெனில், கூட்டெதிர்க்கட்சியினர் மைத்திரிக்கு ஆதரவாக செயற்படுவர், அந்த இடத்தில் மகிந்தவின் கரங்கள் வலுப்பெரும் என்பதும் சாத்தியமே..!

பொறுத்திருந்து பார்க்கலாம், தென்னிலங்கை அரசியலில் நாளை எவ்வாறான மாற்றங்கள் நிகழப்போகின்றன என்பதையும், ரணில் விக்ரமசிங்கவின் அடுத்த கைப்பாவை யார் என்பதையும்? அவரின் அடுத்தக்கட்ட இராஜதந்திர நகர்வு என்ன என்பதையும்...!

இந்த கட்டுரை ஒரு பொது எழுத்தாளர் Jeslin அவர்களால் வழங்கப்பட்டு 04 Jan 2018 எமது செய்திப்பிரிவால் பிரசுரிக்கப்பட்டது. இந்த கட்டுரையின் எந்தவொரு தயாரிப்பிலும் தமிழ்வின் செய்திப்பிரிவு பங்கேற்கவில்லை. இக் கட்டுரை சம்பந்தமான கருத்துக்களை Jeslin என்பவருக்கு அனுப்ப இங்கே