Sunday, June 17, 2018

How Lanka

பந்தை சேதப்படுத்தினாரா இலங்கை அணித்தலைவர் தினேஷ் சண்டிமல் ?

பந்தை சேதப்படுத்திய விவகாரம் தொடர்பாக இலங்கை அணித்தலைவர் தினேஷ் சண்டிமல் மீது ஐசிசி, சனிக்கிழமை நடவடிக்கை எடுத்துள்ளது.

மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணம் செய்துள்ள இலங்கை அணி டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

இதன் 2-ஆவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டத்தில் இலங்கை அணித்தலைவர் தினேஷ் சண்டிமல் பந்தை சேதப்படுத்தியது தொடர்பாக கள நடுவர்கள் புகார் அளித்தனர்.

மேலும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு கூடுதலாக 5 ஓட்டங்கள் வழங்கி நடவடிக்கை எடுத்தனர்.

இந்நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இலங்கை அணி வீரர்கள் களத்துக்கு வராமல் போராட்டம் நடத்தினர்.


சிறிது நேரத்துக்கு பின்னர் மீண்டும் வந்து ஆட்டத்தை தொடர்ந்தனர். அப்போது இலங்கை அணித்தலைவர் தினேஷ் சண்டிமல், கள நடுவர்களுடன் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதுகுறித்து இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவிக்கையில், பந்து சேதப்படுத்தியது உள்ளிட்ட எவ்வித தவறான நடவடிக்கைகளிலும் இலங்கை வீரர்கள் ஈடுபடவில்லை.

நடுவர்களின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தான் களத்துக்கு வராமல் சிறிது நேரம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் கிரிக்கெட்டின் மேன்மையை பாதுகாக்கும் வகையில், மீண்டும் விளையாடத் தொடங்கிய இலங்கை அணிக்கு பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

இந்த விவகாரத்தில் இலங்கை வீரர்கள் மீதான அவதூறுக்கு எதிராக இலங்கை கிரிக்கெட் வாரியம் நிச்சயம் துணை நிற்கும் என்று அறிக்கை வெளியிட்டிருந்தது.

இதனிடையே இலங்கை அணித்தலைவர் தினேஷ் சண்டிமல் மீது விதி எண் 2.2.9 கீழ் சர்வதேச கிரிக்கெட் கௌன்சில் (ஐசிசி) நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.