Saturday, June 2, 2018

How Lanka

குடிநீர் பிரச்சினை தொடர்பில் வேலணை பிரதேச சபை அதிரடி முடிவு

வேலணை பிரதேச மக்கள் எதிர்கொள்ளும் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வுகாணும் பொருட்டு வேலணை பிரதேச சபையில் விஷேட தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளமையால் குறித்த பிரச்சினைக்கு விரைவில் நிரந்தர தீர்வு காணப்படும் என வேலணைபிரதேச சபை தவிசாளரும் குறித்த பிரதேசத்தின் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நிர்வாக செயலாளருமான நமசிவாயம் கரணாகரகுருமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் (30) வேலணை பிரதேசசபையின் விசேட அமர்வு தவிசாளர் நமசிவாயம் கருணாகரகுருமூர்த்தி தலைமையில் பிரதேசசபை சபா மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போதே குறித்த விடயம் கடும் வாதப்பிரதிவாதங்களுக்கிடையே நிறைவேற்றப்பட்டது.

இது தொடர்பில் தெரியவருவதாவது –

கடும் வரட்சி காரணமாக வேலணை பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட பல பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதால் அவற்றை நிவர்த்தி செய்வதில் குறித்த பிரதேச சபை கடும் பிரச்சினைகளை எதிர்கொண்டுவந்தது.

இந்நிலையில் இன்றையதினம் நடைபெற்ற விசேட அமர்வில் குறித்த குடிநீர் விநியோகிப்பதில் உள்ள பிரச்சினைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டன. இதன் அடிப்படையில் வேலணை பிரதேசத்தில் காணப்படும் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வுகாணும் முகமாக சில தீர்மானங்கள் எடுக்கப்பட்டதுடன் அவை நடைமுறைப்படத்தப்படுவதற்கான செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டன.

இதன்படி சபை உறுப்பினர்களின் கருத்துக்களின் பிரகாரம்  நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களாக

·         தீவக மக்கள் அனைவருக்கும் 3 இலட்சம் லீற்றர் நீருக்கு மேற்படாமல் வழங்குதல்

·         விசேட தேவைகளுக்கு பிரதேச சபை உறுப்பினர்களின் பரிந்துரைக்கு அமைய தவிசாளரின் அனுமதியுடன் தேவைக்கு ஏற்ற அளவு மட்டுப்படுத்தி வழங்குதல்.

·         தீவகம் தவிர்ந்த வெளியிடங்களுக்கு நீர் கொண்டு செல்வதை முற்றாக தடை செய்தல்

·         வேலணை பகுதியில் காணப்படும் குடிநீர் கிணறுகளில் இருந்து நீரை காலை 5.00 மணிமுதல் மாலை7.00 மணிவரை மட்டுமே எடுக்கமுடியும் உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

போன்றதீர்மானங்கள் மூலம் இறுதியாக மக்களின் குடிநீர் தேவைக்கேற்ற அளவு மட்டும் நீரை  மட்டுப்படுத்தி வழங்குதல் என தீர்மாணிக்கப்பட்து.