Thursday, December 27, 2018

How Lanka

பும்ராவின் வேகத்தில் பலோ ஓன் ஆனது அவுஸ்ரேலிய அணி

மெல்போர்ன் டெஸ்டில் பும்ராவின் புயல்வேக பந்துவீச்சினால் அவுஸ்திரேலியா அணி 151 ஓட்டங்களுக்கு ஆல்-அவுட் ஆகியுள்ளது.

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டெஸ்டில் விளையாடி வரும் இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்புக்கு 443 ஓட்டங்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

அதிகபட்சமாக புஜாரா 106 ஓட்டங்களும், கோஹ்லி 82 ஓட்டங்களும் எடுத்தனர். பின்னர் ஆடிய அவுஸ்திரேலிய அணி நேற்று ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 8 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

இந்நிலையில் இன்று அவுஸ்திரேலியா தனது ஆட்டத்தை தொடங்கியது. பின்ச்சை 8 ஓட்டங்களில் இஷாந்த் சர்மாவும், ஹாரிஸை 22 ஓட்டங்களில் பும்ராவும் வெளியேற்றினர்.

அதன் பின்னர் வந்த கவாஜா(21), ஷான் மார்ஷ்(19), ஹெட்(20) ஆகியோர் குறிப்பிட்ட இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்தனர். அதன் பின்னர் வந்த டிம் பெய்ன் 22 ஓட்டங்களில் அவுட் ஆக ஏனைய விக்கெட்டுகளும் மள மளவென சரிந்தன.

கடைசி இரண்டு விக்கெட்டுகளை பும்ரா கைப்பற்றினார். இதன்மூலம் அவுஸ்திரேலிய அணி 151 ஓட்டங்களுக்கு சுருண்டது. அபாரமாக பந்து வீசிய பும்ரா 15.5 ஓவர்களில் 33 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதில் 4 ஓவர்கள் மெய்டன் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜடேஜா 2 விக்கெட்டுகளையும், இஷாந்த் சர்மா மற்றும் ஷமி தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். தற்போது இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்சை ஆடி வருகிறது. விஹாரி 13 ஓட்டங்களுடனும், மயங்க் அகர்வால் 14 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.