தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டதன் பின்னர் புதிய அமைச்சரவையின் பதவியேற்பை நடத்துவதற்கு உத்தேசித்துள்ளதாக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 11 ஆம் திகதிக்குப் பின்னர் புதிய அமைச்சரவை பதவியேற்கும் என கட்சியின் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர் விபரங்களை அடுத்த ஏழு நாட்களுக்குள் வழங்குமாறு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு கட்சிகளின் செயலாளர்களுக்கு அறிவித்துள்ளது.
இம்முறை பொதுத்தேர்தலில் அமோக வெற்றியைப் பெற்றுக்கொண்ட ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு 17 தேசியப் பட்டியல் ஆசனங்கள் கிடைத்துள்ளதுடன், அதன் பெயர் பட்டியல் நேற்று (07) மாலை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்பட்டது.
ஐக்கிய மக்கள் சக்திக்கு 7 தேசியப்பட்டியல் ஆசனங்கள் கிடைத்துள்ளன.
தேசிய மக்கள் சக்தி, இலங்கை தமிழரசுக் கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், எமது மக்கள் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு தலா ஒரு தேசியப் பட்டியல் ஆசனம் கிடைத்துள்ளது.
தமது கட்சியின் தேசியப் பட்டியல், பாராளுமன்ற உறுப்பினர் பட்டியல் இதுவரை தீர்மானிக்கப்படவில்லை என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியும் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் தொடர்பில் இதுவரை தீர்மானிக்கவில்லையென முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தயா கமகே தெரிவித்துள்ளார்.
இதனிடையே, ஒன்பதாவது பாராளுமன்றத்தின் புதிய பிரதமரான மஹிந்த ராஜபக்ஸ நாளை பதவியேற்கவுள்ளார்.
நாளை காலை 8.30 அளவில் களனி ரஜமஹா விகாரையில் இதற்கான நிகழ்வு இடம்பெறவுள்ளது.