Thursday, September 29, 2016

How Lanka

இளஞ்செழியன் அதிரடி இரட்டைக் கொலை கைதிக்கு மரண தண்டனை

யாழ்ப்பாணம் நீர்வேலியில் இடம்பெற்ற இரட்டைக் கொலை தொடர்பில் குற்றவாளிக்கு யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் இரட்டை மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

கடந்த 2011 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 8 ஆம் திகதி தனது சகோதரியையும், மைத்துனனையும் அடித்து படுகொலை செய்ததுடன், மருமகன் மீது கொலை தாக்குதல் முயற்சி மேற்கொண்டமை தொடர்பில் குறித்த கொலையாளி கைது செய்யப்பட்டார்.

குறித்த கொலைச்சம்பவம் தொடர்பில் பெண்ணின் சகோதரரான குணா என்று அழைக்கப்படும் அருணாச்சலம் குகணேஸ்வரன் கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில் இந்த தீர்ப்பு வழங்கபட்டுள்ளது.

குறித்த இரட்டைக்கொலை வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதை அடுத்து கொலையாளிக்கு மரண தண்டனை விதித்த நீதிபதி இளஞ்செழியன், மகன் மீது கொலை முயற்சி தாக்குலுக்கு 5 வருட கடூழிய சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபா அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

அத்துடன், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு 1 இலட்சம் நட்டஈடு வழங்க வேண்டும் என்றும், அந்த பணத்தை வழங்கத் தவறின் மேலும் இரு வருட கடூழிய சிறைதண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றும் தமது தீர்ப்பில் இளஞ்செழியன் தெரிவித்திருந்தார்.

குறித்த சம்பவத்தில் மார்க்கண்டு உதயகுமார், வசந்திமால உதயகுமார் ஆகியோர் உயிரிழந்ததுடன், உதயகுமார் குகதீபன் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.