Saturday, October 1, 2016

How Lanka

சீனாவின் முதலாவது தொங்கும் ரயிலின் சோதனை ஓட்டம் வெற்றி

சீனாவின் முதலாவது தொங்கும் ரயிலின் சோதனை ஓட்டம் வெற்றியளித்துள்ளதாக சீன தொழிற்நுட்ப துறையினர் அறிவித்துள்ளனர்.


சீனாவின் தென்மேற்கு மாகாணமான சிச்சுவான் மாகாணத்தின் தலைநகர் செஞ்க்டுவில் நேற்று இந்த ரயிலின் சோதனை ஓட்டம் நடைபெற்றது.

லித்தினியம் பேட்டரி மின்சக்தியில் இயங்கும் இந்த ரயில், மணிக்கு 60 கிலோ மீற்றர் வேகத்தில் செல்லும். 300 மீற்றர் ரயில் பாதையில் ரயிலின் சோதனை ஒட்டம் வெற்றிகரமான நடந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ரயிலில் 120 பயணிகள் பயணிக்க முடியும் என திட்டத்தின் பிரதான வடிவமைப்பாளரான ஜியாடெங் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஜாய் வான்மிங் தெரிவித்துள்ளார்.

ஒரு கிலோ மீற்றர் சுரங்க ரயில் பாதை அமைக்க செலவாகும் தொகையை விட 5ல் ஒரு வீதமே தொங்கு ரயில் பாதையை அமைக்க செலவாகும் என அவர் கூறியுள்ளார்.

அத்துடன் லித்தினியம் பேட்டரிகள் பயன்படுத்துவது சுற்றுச் சூழலுக்கு உகந்ததாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது இந்த ரயில் பாதையின் நீளத்தை 1.2 கிலோ மீற்றர் தூரத்திற்கு விரிவாக்க உள்ளதாகவும் பின்னர், 10 ஆயிரம் கிலோ மீற்றர் தூரத்திற்கு இந்த ரயில் பாதை விரிவாக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.