Friday, October 14, 2016

How Lanka

அமெரிக்காவுக்கு சீனா அறிவுறுத்து

ஆசிய விவகாரங்களில் தலையிட வேண்டாம் என அமெரிக்காவுக்கு சீனா அறிவுறுத்து.
தெற்காசியாவில் தற்போது சூடு பிடித்து வரும் தென் சீனக் கடல் விவகாரத்தில் அமெரிக்கா தலையிட வேண்டாம் என சீனா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்சீனக் கடலின் பெரும் பகுதியை நீண்ட காலமாக சீனா கொண்டாடி வருவதால் அப்பிராந்தியத்துக்கு உரித்துடைய ஏனைய நாடுகளான பிலிப்பைன்ஸ், மலேசியா, வியட்நாம், தைவான் ஆகிய நாடுகளுக்கும் சீனாவுக்கும் இடையே சர்ச்சை நீடித்து வருகின்றது.

சீனா இப்பகுதியை ஆக்கிரமித்து செயற்கைத் தீவுகளை அமைத்து வரும் முயற்சியை அமெரிக்கா உட்பட மேற்குலக நாடுகள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் சீனப் பாதுகாப்பு அமைச்சர் சஹாங் வான் குவான் தெற்காசிய விவகாரங்களில் அமெரிக்கா தலையிட வேண்டாம் என வெளிப்படையாகவே கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் அமெரிக்கா தனது இராணுவ பலத்தைப் பயன்படுத்தி தெற்காசிய நாடுகளில் பாதுகாப்பு மற்றும் பொருளாதார உடன்படிக்கைகளை ஏற்படுத்தி வருவதை சீனா கண்காணித்த வண்ணமே உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை சீனா அடுத்த வருடம் ரஷ்யாவுடன் இணைந்து ஏவுகணை எதிர்ப்பு பயிற்சிகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. செவ்வாய்க்கிழமை பீஜிங்கில் தொடங்கிய அனைத்துலக பாதுகாப்பு மாநாட்டிலேயே சீனா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இம்மாநாட்டில் 60 இற்கும் அதிகமான நாடுகளைச் சேர்ந்த தற்பாதுகாப்பு அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர். மேலும் இம்மாநாடு தொடர்ந்து 3 நாட்களுக்கு நடைபெறவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.