Sunday, October 2, 2016

How Lanka

தமிழக உள்ளாட்சி தேர்தலில் மனுதாக்கல் இன்று முடிகிறது

இதுவரை 2.5 லட்சம் பேர் விண்ணப்பம்

சென்னை : உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்றுடன் முடிவடைகிறது. இந்த மனுக்கள் மீது நாளை பரிசீலனை நடைபெறுகிறது. தொடர்ந்து 6ம் தேதி இறுதிப்பட்டியல் வெளியிடப்படுகிறது. தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருகிற 17ம் தேதி மற்றும் 19ம் தேதி என இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. முதற்கட்டமாக, 17ம் தேதி திருச்சி, நெல்லை, மதுரை, கோவை,சேலம், ஈரோடு, திருப்பூர், தஞ்சாவூர்,வேலூர், தூத்துக்குடி ஆகிய 10 மாநகராட்சிகள், 64 நகராட்சிகள், 255  பேரூராட்சிகளுக்கும், 193 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 332 மாவட்ட ஊராட்சி வார்டுகள், 3,250 ஊராட்சி ஒன்றிய வார்டுகள், 50,640 கிராம ஊராட்சி வார்டுகளுக்கும், 6,444 கிராம ஊராட்சி தலைவர் தேர்ந்தெடுப்பதற்கும் தேர்தல் நடைபெற உள்ளது. 2ம் கட்டமாக 19ம் தேதி சென்னை, திண்டுக்கல் ஆகிய 2 மாநகராட்சிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது.

மேலும் 60 நகராட்சிகளுக்கும், 273 பேரூராட்சிகளுக்கும், ஊரக பகுதிகளில் 195 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 323 மாவட்ட ஊராட்சி வார்டுகளுக்கும், 3,221 ஊராட்சி ஒன்றிய வார்டுகளுக்கும், 48,684 கிராம ஊராட்சி வார்டுகளுக்கும், 6080 கிராம ஊராட்சி தலைவர்களை தேர்ந்தெடுப்பதற்கும் தேர்தல் நடைபெறுகிறது. இதில் 1,18,974 ஊரக உள்ளாட்சி மற்றும் 12,820 நகர்புற உள்ளாட்சி பதவிகள் என மொத்தம் 1,31,794 பதவிகள் நிரப்பப்பட உள்ளன. பெண்களுக்கு 50%: இத்தேர்தலில், பெண்கள் போட்டியிட 50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இதன் படி, திருச்சி, திண்டுக்கல், நெல்லை, மதுரை, கோவை ஆகிய 5 மாநகராட்சிகள் பெண்கள்(பொது), வேலூர் மாநகராட்சி எஸ்.சி(பெண்கள்), தூத்துக்குடி மாநகராட்சி எஸ்.சி(பொது), சென்னை, சேலம், ஈரோடு, தஞ்சாவூர், திருப்பூர் ஆகிய 5 மாநகராட்சி பொது பிரிவினருக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 26ம் தேதி தொடங்கியது. இதை தொடர்ந்து அதிமுக, திமுக, தேமுதிக, பாமக, மக்கள் நல கூட்டியக்கம், பாஜ, தமாகா உள்ளிட்ட கட்சி வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதுமட்டுமின்றி, சுயேட்சையாக போட்டியிடவும் ஏராளமானோர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். 2.5 லட்சம் பேர்: வேட்புமனு தாக்கல் தொடங்கிய முதல் நாளன்று 4,748 பேரும், 2ம் நாளில் 6,433 பேரும், 3வது நாளில் 31,726, 4ம் நாளில் 22,469, 5ம் நாளில் 1,65,644, 6ம் நாளில் 21,018 பேரும் மனுத்தாக்கல் செய்தனர். அதாவது, தொடர்ந்து 6 நாட்களில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 1,807 பேரும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு  9407 பேர், கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 40,872 பேர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 1,79,204 பேர் , மாநகராட்சி உறுப்பினர் பதவிக்கு 3,912 பேர்  , நகராட்சி மன்ற வார்டு உறுப்பினர் பதவிக்கு 5,479 பேர், பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 11,671 பேர் என மொத்தம் 2,52,352 பேர் ேவட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை மற்றும் காந்தி ஜெயந்தி என்பதால் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனால், வேட்புமனு தாக்கல் நடைபெறவில்லை. இந்த நிலையில், இன்று வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய கடைசி நாளாகும். கடைசி நாள் என்பதால் இன்றும் ஏராளாமானோர் வேட்பு மனு தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து நாளை வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படுகிறது. வரும் 6ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு வேட்பு மனுக்களை திரும்ப பெறுவதற்கு கடைசி நாளாகும். அன்று இரவு வேட்பாளர்களின் இறுதி பட்டியல் வெளியிடப்படும். உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கப்பட்டு விட்டது. மேலும் சுயேட்சைகளுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.

கடந்த முறையை விட அதிகம்
  • கடந்த உள்ளாட்சி தேர்தலின் போது, சுமார் 3 லட்சம் பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.
  • இந்த முறை அதை விட அதிகமாக இருக்கும். 6 ம் தேதி இறுதிப்பட்டியல்.
  • வேட்பாளர் பட்டியல் இறுதியானதும் பிரசாரம் விறுவிறுப்பாகும்
  • கட்சி தலைவர்களும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.