Monday, December 5, 2016

How Lanka

அமரர் ஆனார் தமிழக முதல்வர் "அம்மா "


பல ஆண்டுகளாக தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்திய அளவில் தனது அரசியல்
நிகழ்வால் மிகப்பெரும் அதிர்வுகளை ஏற்படுத்திய இந்திய தேசத்தின் இரும்பு பெண்மணியாக திகழ்ந்தவர் நமது முன்னாள் முதல்வர் மரியாதைக்குரிய செல்வி ஜெயலலிதா என்பது வரலாறு கூறும் உண்மை.

கதாநாயகர்கள் மட்டுமே கோலொச்சி கொடிநாட்டிக்கொண்டிருந்த தமிழ் திரையுலகில் மின்னலாக சீறி வந்து தனக்கான ஒரு தனி பிம்பத்தை மிக கம்பீரமாக நிலை நாட்டியவர் நமது முன்னாள் முதல்வர் அவர்கள்.
மீனவர் பிரச்சனையாக இருந்தாலும் கச்சத்தீவு பிரச்சினையாக இருந்தாலும் காவேரி பிரச்சினை முல்லைப் பெரியாறு பிரச்சனை மீத்தேன் பிரச்சினை ஜல்லிக்கட்டு உட்பட தமிழகத்தின் உரிமை பிரச்சினைகள் எதுவாக இருந்தாலும் சமரசம் இன்றி உறுதியோடு நின்று தமிழர் உரிமைக்காக இந்திய அரசிடமும் இந்திய நீதித்துறையிடமும் இடைவிடாமல் போராடியவர்.
 இது மட்டுமல்லாமல் ஈழப்பிரச்சனையில் மரியாதைக்குரிய எம் ஜி ஆர் அவர்களுக்கு இணையாக, மண்ணையும் லட்சக்கணக்கான மனித உயிர்களையும் இழந்து நிற்கும் எங்களின் ஈழத்தமிழர்களுக்கு தனித்தமிழீழமே தீர்வு என்று அறுதி பெரும்பான்மை கொண்ட, வரலாற்று சிறப்பு மிக்க நமது தமிழ் நாடு சட்ட மன்றத்தில் தீர்மானமாக நிறைவேற்றியவர் இன்று நம்மிடையே இல்லை என்பதை என்னும் போது தொண்டை கணத்து நெஞ்சம் விம்முகிறது.

எத்தனையோ முறை கல்லூரி மாணவ தலைவர்களோடு ஈழ பிரச்சினைக்காகவும் எழுவர் விடுதலைக்காகவும் தமிழின உரிமைக்காகவும் மனு கொடுபதற்காக கோட்டைக்கு சென்றிருக்கிறேன்.கடந்த ஆண்டு மார்ச் மாதம் நடக்கவிருந்த ஐநா கூட்டத்தொடரில் ஒருவேளை ஈழத்திற்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்தால் இந்தியா எதிர்க்க வேண்டும் என்றும் அதற்கு பதிலாக இந்தியாவே இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வேண்டும் என்றும் பதிவிட்டு முதல்வரின் முதன்மைச் செயலாளர் திரு ஜான் லூயிஸ் ஐஏஎஸ் அவர்களிடம் மனுவினை நீட்டியபடி மறக்காமல் முதல்வரிடம் தந்துவிடுங்கள் மாணவர்களின் கோரிக்கை இது என்றபோது நீங்கள் வந்த செய்தியை கூறி விட்டேன் விரைவில் உங்களுக்கு நல்ல செய்தி வரும் என அனுப்பி வைத்தார். மனு கொடுத்த மறுநாள் காலை ஒன்பது ஐந்துக்கு அனைத்து தொலைக்காட்சிகளிலும் சட்டசபை கூடியவுடன் முதல் தீர்மானமாக நாங்கள் மனுவினில் கொடுத்திருந்த வாசகங்கள் அச்சு பிசகாமல் அதே வார்த்தையோடு முதல்வர் அவர்களால் முன் மொழியப்பட்டு ஓடிக்கொண்டிருந்தது மனதுக்கு சொல்ல முடியாத ஆறுதலாக இருந்தது.
வீரம் செறிந்த விடுதலைப் புலிகளின் இயக்கத்திற்கு ஒரே ஒரு முறைதான் தலைவர் எம் ஜி ஆர் அவர்களின் கைகளால் பணம் கையளிக்கப்பட்டது. அன்றைய காலக்கட்டத்திலேயே மூன்று முறை மரியாதைக்குரிய செல்வி ஜெயலலிதா அவர்களின் கரங்களால் அதுவும் அவரது போயஸ்காடன் வீட்டில் வைத்துதான் நினைத்து பார்க்க முடியாத பெரும் தொகை போராளிகளிடம் கொடுக்கப்பட்டதாம்.ஒவ்வொரு முறை தரும் பொழுதும் விரைவில் வெற்றி செய்தியை சொல்லுங்கள்… இந்த பூமிப்பந்தில் தமிழர்களுக்கென்று ஒரு நாடு வேண்டும் அது ஈழமாக இருக்கட்டும் என்று வாழ்த்தி அனுப்புவாராம். இதனை தலைவர் எம் ஜி ஆரோடும் மரியாதைக்குரிய முன்னாள் முதல்வரோடும் சம்பந்தப்பட்ட அரசியல் பெரியவர்கள் கூற கேட்டபொழுது ஆன்மா வரை சிலிர்த்து கண்கள் குளமாகியது.
முன்னாள் முதல்வர் அவர்கள் உடல் நலிவுற்று அப்பல்லோவில் இருந்த நிலையில் கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு முன்பு நலம் விசாரிக்க சென்று அய்யா இன்றைய முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களை சந்தித்தபோது நம்பிக்கையாக இருந்தது. ஆனால் இன்று செல்வி ஜெயலலிதா என்கிற சரித்திர நம்பிக்கை மறைந்து விட்டது. என்ன செய்வது, கண்ணில்லை என்பதை காலன் மீண்டும் ஒரு முறை நிரூபித்து விட்டான்.
ஈழத்தமிழர்களுக்கு ஒரு விடியல் வரும் என நம்பியிருந்த வேளையில் முதலில் இந்திரா இறந்தார், பின்பு எம் ஜி ஆர் இறந்தார். இறுதி நம்பிக்கையான அம்மையார் ஜெயலலிதாவும் இப்போது இறந்து விட்டார்.

முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்டார் அய்யா ஓ. பன்னீர்செல்வம் தமிழக முதல்வர் செல்வி.ஜெ.ஜெயலலிதா அவர்கள் மறைவு தமிழகத்தை துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது.மறைந்த எம்.ஜி.ஆர் அவர்களுக்குப் பிறகு அ.இ.அ.தி.மு.க -வை கட்டிக் காத்து ஐந்து முறை ஆட்சியில் அமர்த்திய பெருமைக்குரிய பெண்ணாகத் திகழ்ந்து புதிய சகாப்தத்தைத் தோற்றுவித்தவர். காவிரி , முல்லைப் பெரியாறு போன்ற தமிழகத்தின் உயிர் நாடியான சிக்கல்களில் உறுதியான நிலைப்பாட்டை எடுத்து தமிழ்நாட்டின் உரிமைகளைக் காத்த பெருமை அவருக்கு உண்டு.