சவூதியிலிருந்து தங்கம் கடத்தி வந்த கல்முனை நபர்கள் விமான நிலையத்தில் கைது.
சவூதி அரேபியாவுக்கு உம்ராவுக்குச் சென்று நாடு திரும்புகையில் சட்டவிரோதமான முறையில் சுமார் 26 இலட்சம் ரூபா பெறுமதியான தங்கம், நகைகளை கடத்தி வந்த இருவர் நேற்று (23) கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து மீட்கப்பட்ட தங்க நகைகளின் பெறுமதி 26 இலட்ச ரூபாவாவென கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தின் சுங்கத் திணைக்களப் பணிப்பாளர் பராக்கிரம பஸ்நாயக்க தெரிவித்தார்.
இந்த நகைகளின் மொத்த நிறை 600 கிராமெனவும், இதில் 89 மோதிரங்கள், 17 காப்புகள், 03 பதக்கங்கள், ஒரு தங்கச் சங்கிலி மற்றும் ஒரு தங்க பிஸ்கட் என்பன அடங்குவதாகவும் அவர் கூறினார்.
கல்முனையிலிருந்து சவூதி அரேபியாவுக்கு உம்ரா சென்ற யாத்திரிகர்களே மேற்படி தங்கத்தை கடத்தி வந்துள்ளனர். சந்தேக நபர்கள் நேற்றுக் காலை சவூதி அரேபியாவுக்கு சொந்தமான எஸ்.வி 788 என்ற விமான மூலம் இலங்கை வந்தடைந்தனர். இவர்கள் தமது நகைகளை சுங்கத் திணைக்களத்தில் பதிவு செய்யாமல் நேரடியாக எடுத்து வந்தபோதே சுங்க அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் இருவரும் கல்முனை பிரதேசத்தைச் சேர்ந்தவர்களென தெரிவிக்கப்படுகிறது. தங்க நகைகள் யாவும் அரசாங்கத்தினால் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் பணிப்பாளர் பஸ்நாயக்க தெரிவித்தார்.