பெங்களூர் சிறையில் சசிகலாவைச் சந்திக்க டிடிவி தினகரனுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் அதிமுக வினருக்கும் பொலிஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் சிறப்பு சலுகைகளைப் பெற அதிகாரிகள் இலஞ்சம் பெற்ற விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததை அடுத்து, கெடுபிடிகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் அதிமுக (அம்மா) அணி துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் சசிகலாவைச் சந்திப்பதற்காக நேற்று முன்தினம் பிற்பகல் 3 மணியளவில் பெங்களூர் வந்தார்.
அவருடன் கர்நாடக அதிமுக செயலாளர் புகழேந்தி எம்எல்ஏ வெற்றிவேல் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் வந்தனர். சிறை வளாகத்துக்கு முன்பாகவே தினகரனின் வாகனம் நிறுத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டது.
2-வது சோதனைச் சாவடியில் தினகரனின் வாகனம் நிறுத்தப்பட்டு, சிறை வளாகத்துக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் அதிமுக நிர்வாகிகள் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து தினகரன் சுமார் 500 மீட்டர் தூரம் நடந்து சென்றார்.
அங்கிருந்த கட்டுப்பாட்டு அறையில் இருந்த பொலிஸார், 'கைதிகளை காலை 11 மணி முதல் மாலை 5 மணிவரை மட்டுமே பார்வையாளர்கள் பார்க்க முடியும். தற்போது 4.30 மணி ஆகிவிட்டது. உயர் அதிகாரிகளின் அனுமதி இல்லாததால் உங்களை (தினகரன்) சிறைக்குள் அனுமதிக்க முடியாது' என்றனர். இதனால் கோபமடைந்த தினகரன் பொலிஸாரிடம், ‘ஏற்கெனவே உயர் அதிகாரியிடம் அனுமதி பெறப்பட்டுள்ளது’ என்றார்.
கர்நாடக அதிமுக செயலாளர் புகழேந்தி, சிறைக் கண்காணிப்பாளர் அனிதாவைத் தொடர்புகொண்டு, சசிகலாவை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்றார். இதனை அதிகாரிகள் ஏற்க மறுத்ததால் இரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இது தொடர்பாக தினகரன் கூறுகையில், 'வியாழக்கிழமை சசிகலாவை சந்திக்க அனுமதி வாங்கி இருந்தோம். கடைசி நேரத்தில் அனுமதிக்க முடியாது என்றும், வெள்ளிக்கிழமை வருமாறும் கூறியுள்ளனர்' என்றார்.
இதையடுத்து தினகரன் முதல் முறையாக சிறையில் சசிகலாவை சந்திக்காமல் சென்னை திரும்பினார்.