Monday, July 10, 2017

How Lanka

பருத்தித்துறையில் தொடரும் பதற்றமான நிலை! பொலிஸ் அதிகாரிகளுக்கு விளக்கமறியல்

யாழ். பருத்தித்துறையில் இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள இரு பொலிஸ் அதிகாரிகளையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தவிடப்பட்டுள்ளது.

குறித்த இருவரையும் எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதிமன்ற நீதிபதி நளினி சுபாகரன் இன்று உத்தரவிட்டுள்ளார்.

இதை தொடர்ந்து இருவரையும் அநுராதபுரம் சிறைச்சாலைக்கு பொலிஸார் அழைத்துச் சென்றுள்ளனர்.

உயிரிழந்த இளைஞனின் சடலம் தற்போது உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும், நாளை இறுதிச்சடங்குகள் நடைபெற உள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

எனினும் குறித்த பகுதியில் பதற்றமான நிலை தொடர்ந்தும் நீடிப்பதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். யாழ். பருத்தித்துறை பிரதேசத்தில் மணல் ஏற்றிச்சென்ற லொரி மீது நேற்று நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்திருந்தார். இந்த சம்பவத்தில் இரு பொலிஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டதுடன், அவர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.


எனினும் உரிய அனுமதியின்றி மணல் ஏற்றிச் சென்ற லொரி ஒன்று தமது உத்தரவை மீறி சென்றதால் அதன் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டதாகவும், அதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்ததாகவும் பொலிஸார் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.