கொழும்பு மற்றும் சனநெரிசல் அதிகமுள்ள பிரதேசங்களின் ஆறுகள் மற்றும் கால்வாய்களில் கொட்டப்படும் கழிவுப்பொருட்கள் காரணமாக கடற்பகுதிகள் அசுத்தமடைந்து காணப்படுகின்றன.
பலத்த மழையை அடுத்து இந்த நிலை தோன்றியுள்ளதாக கரையோர பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்தது.
கொழும்பு – வௌ்ளவத்தை பகுதியில் கடலுடன் சங்கமிக்கும் சில கால்வாய்கள் காரணமாக அப்பகுதியிலும் இந்நிலை காணப்படுகிறது.
கால்வாய்களின் ஊடாக கடலுக்குள் செல்லும் கழிவுப்பொருட்கள் கரையொதுங்குகின்றமையால் வௌ்ளவத்தை, முகத்துவாரம், காக்கைத்தீவு பிரதேசங்களில் அடிக்கடி இவ்வாறான நிலை ஏற்படுவதாக கரையோர பாதுகாப்பு திணைக்களம் சுட்டிக்காட்டியது.
2015 ஆம் ஆண்டு இலங்கையில் சேகரிக்கப்பட்ட அதிகளவிலான சமுத்திரக் கழிவுகளை மாவட்ட ரீதியில் பிரித்து, சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகார சபை அறிக்கையொன்றை சமர்ப்பித்துள்ளது.
அந்த அறிக்கையில் 2015 ஆம் ஆண்டு யாழ். கடற்பகுதிகளில் சுமார் 250 குளிரூட்டிகள் மற்றும் சலவை உபகரணங்கள் கண்டெடுக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
திருகோணமலை கடற்பகுதியில் 1579 ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டதாகவும், அம்பாறை கடற்பகுதியில் 587 கரண்டிகள் மற்றும் கத்திகள் கண்டெடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
அத்துடன், ஹம்பாந்தோட்டையில் இருந்து 211 மருத்துவ ஊசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மாத்தறை கடற்பகுதியில் உபகரணங்களின் பாகங்கள் 1014 கரையொதுங்கியதுடன், களுத்துறை கடற்பகுதியில் இருந்து 2 ,481 பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
கொழும்பு கடற்பகுதியில் இருந்து 887 பாதணிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, 2015 ஆம் ஆண்டு கம்பஹா கடற்கரையில் 44 லைட்டர்களும், புத்தளம் கடற்பகுதியில் 43 பலூன்களும் கண்டுபிடிக்கப்பட்டதாக சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகார சபை குறிப்பிட்டது.