மாதகல் இறங்குதுறையில் மீன்பிடி துறைமுகம் இன்மையால் மீனவர்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
வடபகுதி மீன் உற்பத்தியில் மாதகல் இறங்குதுறை முக்கியப் பங்காற்றுகிறது.
மாதகல் இறங்குதுறையிலிருந்து சுமார் 300 படகுகள் கடற்றொழிலுக்காக கடலுக்குச் செல்கின்றன.
அதிகளவான மீன், இறால்களை பிடித்து வௌிமாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்யும் பகுதியாக மாதகல் இறங்குதுறை விளங்குகின்றது.
எனினும், மீன்பிடித்துறைமுகம் இன்மையால் படகுகளை கட்டமுடியாதுள்ளதாகவும், மழைக் காலங்களில் படகுகளை நீண்டதூரம் இழுத்துசெல்ல வேண்டியுள்ளதாகவும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
படகுகளை பாதுகாப்பதற்கான துறைமுகம் இன்மையால் அவ்வப்போது படகுகள் சேதமடைவதாகவும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
1960 ஆம் ஆண்டு தொடக்கம் 1970 ஆம் ஆண்டு வரை மீனவர்கள் கடலினை ஆழப்படுத்தி தற்காலிகமாக ஒரு துறைமுகத்தினை அமைத்து பாரிய படகுகள் மூலம் மீன்பிடி தொழிலை மேற்கொண்டுவந்தனர்.
எனினும் தற்காலிக மீன்பிடித்துறைமுகம் அழிவடையத்தொடங்கியதையடுத்து பாரிய படகு மீன்பிடித்தொழிலை கைவிட்டு சிறிய படகுகளை பயன்படுத்த தொடங்கியதாக மீனவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மாதகல் இறங்குதுறையில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியில் நங்கூரமிடும் தளம் அமைக்கப்படவுள்ளதாக யாழ். மாவட்ட கடற்றொழில் திணைக்களத்தின் உதவிப்பணிப்பாளரர் ஜெயராஜசிங்கம் சுதாகரன் தெரிவித்துள்ளார்.
2018 ஆம் ஆண்டு மார்ச் மாதமளவில் வேலைத்திட்டங்களை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்