Tuesday, October 31, 2017

How Lanka

பாழடைந்து காணப்படும் காங்கேசன்துறை மஹிந்த மாளிகை


காங்கேசன்துறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட மாளிகையை வட மாகாண மக்களின் தேவைகளுக்காக வழங்குமாறு பல்வேறு தரப்பினரும் விடுத்த கோரிக்கைகள் பலனளிக்கவில்லை.

அந்த மாளிகை வளாகம் பாழடைந்து காணப்படுவதை இன்றும் அவதானிக்க முடிகிறது.

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறையில் சுமார் 100 ஏக்கரில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த வாசஸ்தலம் 20 அறைகள், இரண்டு நீச்சல் தடாகங்கள், ஓய்வறைகள் மற்றும் கேட்போர் கூடம் என்பவற்றைக் கொண்டு நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இந்த வாசஸ்தலத்தின் நிர்மாணப்பணிகள் 2012 ஆம் ஆண்டில் கடற்படையினரால் ஆரம்பிக்கப்பட்டதுடன், இதன்பொருட்டு 250 கோடி ரூபா செலவாகும் என மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது.

பல கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட இந்த மாளிகை இன்று பாழடைந்து காணப்படுகிறது.

இதேவேளை, இந்த மாளிகையை வட மாகாண சபையின் தேவைகளுக்கு வழங்குமாறு மாகாண சபையில் பிரேரணையொன்றும் முன்வைக்கப்பட்டிருந்தது.


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2015 ஆம் ஆண்டு மார்ச் 03 ஆம் திகதி யாழ்ப்பாணம் சென்றிருந்த போது இந்த மாளிகையைப் பார்வையிட்டிருந்தார்.

அத்துடன், 2015 ஆம் ஆண்டு மார்ச் 28 ஆம் திகதி பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் அங்கு சென்று பார்வையிட்டிருந்தார்.

இதேவேளை, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் யாழ். விஜயத்தின்போது கவனம் செலுத்தப்பட்டிருந்த, வடக்கில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி வாசஸ்தலம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ 2015 ஆம் ஆண்டு மார்ச் 05 ஆம் திகதி அறிக்கையொன்றை விடுத்திருந்தார்.

இதுவொரு ஜனாதிபதி வாசஸ்தலமல்ல எனவும் சர்வதேச தொடர்புகளுக்கான நிலையம் என்றும் முன்னாள் ஜனாதிபதி சுட்டிக்காட்டியிருந்தார்.

வடக்கு, கிழக்கு பிரதேசங்களுக்கு விஜயம் செய்கின்ற வெளிநாட்டு இராஜதந்திரிகள் மற்றும் உள்நாட்டு – வெளிநாட்டு பிரமுகர்களின் பயன்பாட்டிற்காக ஜனாதிபதி செயலகத்தின் கீழ் இந்த நிர்மாணப்பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்ததாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்குமிட வசதிகளுடன் நிர்மாணிக்கப்படுவதால், ஏனைய மாநாட்டு நிலையங்களில் இருந்து இந்த நிலையம் வேறுபடுவதாகவும் முன்னாள் ஜனாதிபதி தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் சர்வதேச தொடர்புகளுக்கான நிலையத்தை நிர்மாணிப்பதற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்ததாகவும் அவர் தன் அறிக்கையில் மேலும் கூறியிருந்தார்.

அவ்வாறு என்றால், சர்வதேச தொடர்புகளுக்காக அமைக்கப்பட்டுள்ள இந்த பாரிய கட்டடம் பயன்பாடின்றி பாழடைந்து காணப்படுவது கவலைக்குரியதே!

இது குறித்து கடற்படை ஊடகப் பேச்சாளர் கொமாண்டர் லங்காநாத் திசாநாயக்கவிடம் நியூஸ்பெஸ்ட் வினவியது.

ஆராய்ந்து பதிலளிப்பதாக ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.