Tuesday, October 31, 2017

How Lanka

பாதுகாப்புத்தரப்பினர் கட்டுப்பாட்டில் மரமுந்திரிகை தோட்டங்ககள் - மக்கள் குமுறல்


வட மாகாணத்திலுள்ள மரமுந்திரிகை தோட்டங்களை பாதுகாப்புத்தரப்பினர் தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

இதனால் தமது ஜீவனோபாயம் பாதிக்கப்படுவதாக மக்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர்.

மன்னார் – கொண்டச்சி பகுதியில் மரமுந்திரிகை கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான காணியில் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தினரால் மரமுந்திரிகை செய்கை பண்ணப்படுகின்றது.

சிவில் பாதுகாப்பு திணைக்களத்தினரால் சுமார் 1400 ஏக்கர் நிலப்பரப்பில் 2014 ஆம் ஆண்டு தொடக்கம் மரமுந்திரகை செய்கை பண்ணப்படுகின்றது.

குறித்த பகுதியை மீண்டும் மரமுந்திரிகை கூட்டுத்தாபனத்திற்கு வழங்குமாறு கோரி அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அரச தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாசிமினால் அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மரமுந்திரிகை கூட்டுத்தாபனத்தின் தலைவர் தம்சிறி பண்டார கருணாராத்ன தெரிவித்தார்.

எனினும், கொண்டச்சி மரமுந்திரிகை கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான காணியை விடுவிக்க முடியாது என சிவில் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

பல மில்லியன் ரூபா செலவில் மரமுந்திரிகை நாட்டப்பட்டுள்ளதாகவும் அமைச்சரவையின் அனுமதியுடன் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்திற்கு குறித்த காணியை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் சிவில் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்தது.


எனினும், சிவில் பாதுகாப்பு திணைக்களத்திற்கு மரமுந்திரிகை கூட்டுத்தாபனத்தினாலேயே மரமுந்திரிகைக் கன்றுகள் வழங்கப்பட்டதாக இலங்கை மரமுந்திரிகை கூட்டுத்தாபனத்தின் தலைவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, கிளிநொச்சி பூநகரியிலுள் 3000 ஏக்கர் முந்திரிகைத் தோட்டம் ஏழு வருடங்களாக இராணுவத்தினர் வசமுள்ளது.

மன்னார் – யாழ்ப்பாண வீதியில் 34ஆம் மைல்கல் பகுதியை அண்டி சுமார் 3 கிலோமீற்றர் தூரத்திற்கு முந்திரிகைத் தோட்டம் காணப்படுகிறது.

இதனை விடுவிக்கும் பட்சத்தில் பலர் வேலைவாய்ப்பினைப் பெற்றுக்கொள்ள முடியும் என பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, பூநகரி முந்திரிகைத் தோட்டத்தினை விடுவிக்குமாறு கோரி அரச தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாசிமினால் அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் தம்சிறி பண்டார கருணாரத்ன குறிப்பிட்டார்.

அரச, தனியார் காணிகள் விடுவிக்கப்பட்டு வருவதாகவும் தேசிய பாதுகாப்பினை கருத்திற்கொண்டு சில பகுதிகளை விடுவிக்க முடியாதுள்ளதாகவும் இராணுப்பேச்சாளர் ரொஷான் செனவிரத்ன தெரிவித்தார்.

எவ்வாறாயினும், இது தொடர்பில் ஆராய்ந்து பதிலளிப்பதாகக் குறிப்பிட்டார்.

பாதுகாப்புப் பிரிவினர் வசமுள்ள மரமுந்திரிகைத் தோட்டங்கள் மூலம் பெற்றுக்கொள்ளப்படும் வருமானம் தொடர்பில் மரமுந்திரிகை கூட்டுத்தாபனத்திடம் வினவியபோது, அது தொடர்பில் மதிப்பீடு செய்வது கடினம் என தெரிவிக்கப்பட்டது.